Kamal: "நம்மவர் 69... கமலின் நவீன தீண்டாமை..” ஆண்டவரை வெளுத்து வாங்கிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை கடந்த 7ம் தேதி கொண்டாடினார்.
கமல் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அதேபோல், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள், தொண்டர்கள் கமலுக்கு நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர்.
அப்போது கமல்ஹாசன் நடந்துகொண்ட விதம் 'நவீன தீண்டாமை' என ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கமலின் நவீன தீண்டாமை
உலகநாயகன் கமல்ஹாசன் நவம்பர் 7ம் தேதி தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையடுத்து அவருக்கு ஏராளமானோர் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். திரை பிரபலங்களுக்கு பார்ட்டி, மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் சந்திப்பு என கமல்ஹாசன் பிஸியாக காணப்பட்டார். அப்போது கமல் தனது சொந்த கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் கைகுலுக்காதது பற்றி ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதாவது, "நம்மவர் 69 எனும் தனது பிறந்தநாள் விழாவில் பொதுமக்கள், ரசிகர்களை சந்தித்தார் கமல். அப்போது குறுக்கே தடை அமைத்து வணக்கம் மட்டும் போட்டார் நம்மவர். அன்புடன் கைகுலுக்க நினைத்த ஒருவரை கூட தொடவில்லை. ரஜினி, விஜய் ஆகியோர் மக்கள், ரசிகர்களை அருகில் நிற்கவைத்து போட்டோ எடுத்துக்கொண்டனர், அவர்களுடன் கைகுலுக்கினர். மக்களிடையே இவ்வளவு பெரிய இடைவெளியை வைத்திருக்கும் கமல் பொதுவாழ்விற்கு வந்து சேவை செய்து அப்படியே அறுத்து தள்ளிட்டாலும் என்று நினைக்க வைத்துள்ளார்" என விமர்சித்துள்ளார்.

இன்னொரு டிவீட்டில், கமலின் நவீன தீண்டாமை என கேப்ஷன் கொடுத்துள்ள ப்ளூ சட்டை மாறன், "பொதுமக்கள், ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வந்தும்.. நாலாபுறமும் இடைவெளி ஏற்படுத்தி.. குறுக்கே தடை அமைத்து.. வணக்கம் போட்ட கமல். இவரிடம் கை குலுக்கி, பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு ஏமாற்றம். திருப்பதி பாலாஜி கோயிலை விட கெடுபிடி காட்டிய கட்சியினர், பவுன்சர்கள். ரஜினி, விஜய்க்கு இருக்கும் சமத்துவ எண்ணம் கமலுக்கு இல்லாமல் போனது" எனக் கூறியுள்ளார்.

அதேநேரம் சினிமா நட்சத்திரங்களுடன் மட்டும் கமல் நெருக்கம் காட்டுவதாக ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கியுள்ளார். "நம்மவர் 69 பிறந்தநாள் நிகழ்ச்சியில் வாழ்த்து சொல்ல வந்த மக்களை தள்ளி நிற்க வைத்து.. அவர்களின் கைகளை தொடாமல் வணக்கம் போட்ட கமல்.. இந்த வீடியோவில்? ஆக.. அவரின் கைகள் உங்கள் தோளினை அரவணைத்து.. புகைப்படமெடுக்க விரும்பினால்.. நீங்கள் சினிமாக்காரர் அல்லது செல்வந்தராக இருக்க வேண்டும். ஏனெனில்.. தற்போது இருப்பது விக்ரம் வெற்றிக்கு பிறகு மாறியுள்ள கமல்" எனவும் விமர்சனம் செய்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறனின் இந்த விமர்சனங்கள் கமல் ரசிகர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தாலும், அதனையும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











