சம்பளம் கொடுக்க தயங்கிய தயாரிப்பாளர்... 4 ஏரியாக்கள் மட்டும் வாங்கிய கமல்... கிடைத்ததோ பல கோடிகள்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் KH 234 படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 1996ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படத்தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது.
இந்தப் படத்திற்காக கமல் 1.5 கோடி சம்பளம் கேட்டுள்ளார். ஆனால், தயாரிப்பாளரின் பிடிவாதத்தால் கமல்ஹாசனுக்கு மிகப் பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது.

மீண்டும் பிஸியான கமல்
விக்ரம் திரைப்படம் கொடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பின்னர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, அடுத்ததாக மணிரத்னம் இயக்கும் படம் என 2024 வரை பிஸியான ஷெட்யூலில் காணப்படுகிறார். இதனிடையே தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மூலம் சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார். இதனிடையே அவ்வை சண்முகி படம் வெளியான போது நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

கமலின் அவ்வை சண்முகி
1996 நவம்பரில் வெளியான அவ்வை சண்முகி திரைப்படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியிருந்தார். கமல், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. காதலித்து திருமணம் செய்துகொள்ளும் கமலுக்கும் மீனாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு பிரிந்துவிடுவார்கள். ஆனால், தனது மகளுக்காக அவ்வை சண்முகி என பாட்டி வேடம் போட்டு மீனாவின் வீட்டில் வேலை பார்ப்பார் கமல்.

மடிசார் மாமியாக கலக்கிய கமல்
டான்ஸ் மாஸ்டரான கமல் மடிசார் மாமியாக மீனா வீட்டில் வேலை பார்ப்பதும், அங்கே ஜெமினி கணேசன் அந்த மாமியை காதலிப்பதும் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தது. லேடீஸ் கெட்டப் மட்டும் இல்லாமல் கமலே அந்த பாத்திரத்துக்கு டப்பிங் பேசி அசத்தியிருந்தார். தேவாவின் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட் அடிக்க, அவ்வை சண்முகி வசூலில் சக்கைப்போடு போட்டது. மடிசார் மாமி கெட்டப்பில் காமெடி, ரொமான்ஸ் மட்டும் இல்லாமல் ஆக்ஷனிலும் அசத்தியிருப்பார் கமல்.

கமல் கேட்ட சம்பளம்
கமல்ஹாசன் - கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான இந்தப் படத்தை கேபி ஹரி என்பவர் தயாரித்திருந்தார். ஹாலிவுட்டில் ராபின் வில்லியம்ஸ் நடித்த மிசஸ் டவுட்ஃபயர் என்னும் ஆங்கிலப் படத்தைத் தழுவி தான் அவ்வை சண்முகி எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவ்வை சண்முகி படத்துக்காக 1.5 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார் கமல். ஆனால், அதற்கு சம்மதிக்காத தயாரிப்பாளர் 4 ஏரியாக்களின் ரிலீஸ் ரைட்ஸை மட்டும் கொடுத்துள்ளார்.

பல கோடிகள் லாபம்
அவ்வை சண்முகி பெரிய அளவில் லாபம் தராது என்றே தயாரிப்பாளர் 4 ஏரியாக்களை கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், கமல் மிக முக்கியமான 4 ஏரியாக்களின் தியேட்டர் ரைட்ஸை தட்டித் தூக்கியுள்ளார். அதன்பின்னர் படம் ரிலீஸானதும் வசூலும் மாஸ் காட்ட, கமல்ஹாசனுக்கு 5 கோடிக்கும் மேல் கலெக்ஷன் கிடைத்துள்ளது. 1.5 கோடி சம்பளத்தை விடவும் 4 மடங்கு அதிகமான லாபம் கிடைக்க, கமலின் பிஸினஸ் கணக்கை பார்த்து தயாரிப்பாளரே மிரண்டு விட்டாராம்.


Click it and Unblock the Notifications











