விஸ்வரூபத்திற்கு கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்குக - கமல் புது மனு தாக்கல்

ஏற்கனவே படத்திற்கு அரசு விதித்த தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன் தாக்கல் செய்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்தப் புதிய மனுவை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அமைப்பு தாக்கல் செய்தது.
அதில், விஸ்வரூபம் படத்தைத் திரையிடுவதற்கு, மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு, மற்றும் சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த தடை உத்தரவு ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று அந்த மனுவில் கமல்ஹாசன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு
இதற்கிடையே நாளைய தீர்ப்பை எதிர்பார்த்து விஸ்வரூபம் திரைப்படம் திரையிடப்படவுள்ள தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தீர்ப்பு கமல்ஹாசனுக்கு சாதகமாக வந்தால், திரையிடலாம் என்று உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தால் போராட்டங்கள் வெடிக்கலாம் என்று காவல்துறை எதிர்பார்க்கிறது. எனவே எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில், விஸ்வரூபம் திரையிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து தியேட்டர்களுக்கும் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேபோல கமல்ஹாசனின் ஆழ்வார்ப்பேட்டை அலுவலகம், கொட்டிவாக்கம் வீடு ஆகியவற்றுக்கு ஏற்கனவே பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











