Crazy mohan :கிரேசி மோகனின் முதல் மனைவி.. 4வது ஆண்டு நினைவு நாளில் மனைவி பகிர்ந்த தகவல்!
சென்னை : சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கிரேசி மோகன். இவரது எழுத்தில் ஏராளமான சிறப்பான படங்கள் வெளியாகியுள்ளன.
மேடை நாடகத்திலும் தன்னுடைய தம்பியுடன் இணைந்து இவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேடை நாடகங்களில் காமெடியை புகுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.
கிரேசி மோகனுக்கும் கமலுக்குமான நட்பு அபூர்வ சகோதரர்கள் படத்தில்ல்தான் துவங்கியது. தொடர்ந்து அவரது இறப்பு வரையில் இந்த நட்பு தொடர்ந்தது.

கிரேசி மோகன் 4வது ஆண்டு நினைவு தினம்: சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவாக தமிழ் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தவர் கிரேசி மோகன். இவரது எழுத்தில் சிறப்பான பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த வகையில் கமலுடன் இவர் அதிகமான படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர்கள் இருவரின் நட்பு அபூர்வ சகோதரர்கள் படத்தில் துவங்கியது. தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பம்மல் கே சம்மந்தம், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் என இந்தக் கூட்டணி தொடர்ந்தது.
இந்தப் படங்கள் அனைத்துமே காமெடி தளங்களில் கமல் ரசிகர்களை கவர்ந்த படங்கள். வசனத்திலும் இந்தப் படங்கள் சிறப்பாக அமைந்தன. கமலின் இவ்வளவு காமெடி படங்களில் கிரேசி மோகன் இணைந்து பணியாற்றியது ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் விஷயமாகவே அமைந்தது. இந்தப் படங்களில் இணைந்து பணியாற்றியதற்கு இவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு மற்றும் புரிதலே மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது.

சிறுகதை எழுத்தாளராகவும் மேடை நாடகங்களிலும் கிரேசி மோகன் பெஸ்ட்டாக காணப்பட்டார். மேரேஜ் மேன் இன் சலூன், மாது ப்ளஸ் 2, மீசை ஆனாலும் மனைவி போன்ற மேடை நாடகங்கள் இவரது சிறப்பான மேடை நாடகங்களாக காணப்படுகிறது. சினிமாவில் வசனம் எழுதியதுடன் சில படங்களில் இவர் காமெடி கலாட்டாவும் செய்துள்ளார். இவற்றில் பல படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட்டாக அமைந்துள்ளன.
கடந்த 2019ம் ஆண்டில் மாரடைப்பால் ஜூன் 10ம் தேதி கிரேசி மோகன் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது 4வது ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம், அவரது மனைவி கமலிடம் அவர்களது நட்பு குறித்து தன்னுடைய நினைவுகளை வீடியோ கால் மூலம் பகிர்ந்துள்ளார். அவர்கள் இருவருக்குமான உறவு மிகவும் வியப்பை ஏற்படுத்தியதாகவும், கமலிடம் இருந்து கால் வந்தால், கிரேசியிடம் சென்று உங்களின் முதல் மனைவி கால் செய்துள்ளார் என்றுதான் கூறுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப ஷேவிங் செய்துக் கொண்டிருந்தாலும் அதை பாதியிலேயே விட்டுவிட்டு கமலிடம் பேசத்துவங்கும் கிரேசி மோகன், 4 மணிநேரத்திற்கு அதை தொடர்ந்துள்ளதாகவும், மொபைலில் சார்ஜ் போனால் லேண்ட் லைனில் இவர்களது பேச்சு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடன் பேசியதைவிட கமலிடம்தான் கிரேசி மோகன் அதிகமாக பேசியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு இருவரும் லவ்வர்ஸ் போல தொடர்ந்து பேசுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த வீடியோ காலில் மறுபுறம் பேசிய கமல்ஹாசன், கிரேசியும் தானும் அதிகமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளதாகவும் சிரித்துள்ளதாகவும் ஆனால் தங்களது பேச்சை யாராவது ஒட்டுக் கேட்டால், தாங்கள் இருவரும் சண்டையிடுவதாக அவர்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். அந்த அளவிற்கு உரிமையுடன் தாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம் என்றும் கமல்ஹாசன் இந்த வீடியோவில் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











