கமல் ஹாசனுடன் மீண்டும் இணைகிறாரா லோகேஷ் கனகராஜ்?.. வெளியான சூப்பர் அப்டேட்
சென்னை: லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டன் இயக்குநராக இருக்கிறார். இதுவரை அவர் இயக்கிய படங்களில் லியோ படம் தவிர்த்து அத்தனை படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக அமைந்தவை. குறிப்பாக கமல் ஹாசனை வைத்து அவர் உருவாக்கிய விக்ரம் திரைப்படம் 300 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. தற்போது அவர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார். இந்தச் சூழலில் கமலுடன் அவர் மீண்டும் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
மாநகரம் படத்தை இயக்கி தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக வந்தவர் லோகேஷ் கனகராஜ். யாரிடமும் உதவி இயக்குநராகவெல்லாம் பணியாற்றாத அவர்; தான் இயக்கிய குறும்படங்களின் அனுபவங்களை வைத்து முதல் படத்தை இயக்கினார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார். அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. ஒரே இரவில் நடக்கும்படியான கதை வைத்து; அதற்கு ப்ரிலியண்ட்டான திரைக்கதையை அமைத்து கெத்து காண்பித்தார்.

மாஸ்டர், விக்ரம்: முதல் இரண்டு படங்களுமே ஹிட்டானதைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதல் மூன்று படங்களுமே சூப்பர் ஹிட்டான சூழலில்; கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகி. பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. லோகேஷ் கனகராஜின் கரியரையும் உச்சத்துக்கு கொண்டு சென்று; இந்திய அளவில் ஃபேமஸான இயக்குநராக மாற்றியது.
சறுக்கிய லியோ: சூழல் இப்படி இருக்க கடைசியாக அவர் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கினார். அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக படத்தில் இடம்பெற்ற பிளாஷ்பேக் போர்ஷனை வைத்து லோகேஷ் கனகராஜை ரசிகர்கள் கிண்டல் அதிகமாகவே செய்தார்கள். இதனால் எப்படியாவது அடுத்த படத்தில் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் அவர். அந்தவகையில் அவர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கிவருகிறார்.
லோகேஷின் ஸ்பெஷல்: லோகேஷ் கனகராஜின் ஸ்பெஷல்களில் ஒன்று எல்சியூ. தான் இயக்கிய முந்தைய படங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை அடுத்த படத்திலும் கொண்டுவந்து இணைப்பது வரவேற்பை பெற்றது. ஆனால் அதுவும் லியோவில் எடுபடாமல் போனது. இந்த எல்சியூ தவிர்த்து தன்னுடைய படங்களில் ரெட்ரோ பாடல்களை ஒலிக்கவிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அவருக்கு பிறகுதான் பல இயக்குநர்கள் தங்கள் படங்களில் அந்த மாதிரியான பாடல்களை ஒலிக்கவிடுவது அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கமலுடன் கூட்டணி: இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் மீண்டும் கமல் ஹாசனுடன் இணைவாரா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் இதுகுறித்து கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ""நான் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகன். அவரை நேரில் ஒருமுறை பார்த்துவிட்டாலே போதும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அவரையே இயக்குவேன் என்று நினைக்கவில்லை. அது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். மீண்டும் அவருடன் இணையவிருக்கிறேன்"" என்று தெரிவித்திருக்கிறார்.
அநேகமாக அந்தப் படம் விக்ரம் படத்தின் இரண்டாவது பாகமாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம். அதேபோல் கார்த்தியை வைத்து கைதி 2, சூர்யாவை வைத்து இரும்புக்கை மாயாவி உள்ளிட்ட படங்களையும் அவர் அடுத்தடுத்து இயக்கவிருப்பது நினைவுகூரத்தக்கது. கமலுடன் மீண்டும் இணையவிருப்பதாக லோகி அறிவித்திருப்பது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











