Kamal Haasan: கத்தி அங்கதான் இருக்கனும்.. கையில் இருக்க கூடாது.. மேடையிலேயே கோபப்பட்ட கமல்ஹாசன்!
சென்னை: நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அதாவது ஜூன் 14ஆம் தேதி அவரது கட்சி நிர்வாகிகள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போது கமல்ஹாசனுக்கு வாள் பரிசளித்த தொண்டர் ஒருவர் அதை அவர் கையில் திணித்து, மேலே தூக்கி காட்டச் சொன்னார். அதனைச் செய்ய மறுத்த கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார் கமல் ஹாசன். கட்சி தொடங்கிய அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இவரது கட்சி முதன் முதலாக தேர்தலைச் சந்தித்தது. இந்த தேர்தலில் கிட்டத்தட்ட மாநிலங்கள் முழுவதும் சுமார் 15 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
அதன் பின்னர் கட்சியில் ஏற்பட்ட சில குளறுபடிகளால் கட்சியில் இருந்த நிர்வாகிகள் ஒவ்வொருவராக விலகி, திமுகவில் இணைந்தனர். அதேபோல் கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்றார். இதனால் இவர் காங்கிரஸ் உடன் கை கோர்க்க போகிறார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணிக்காக பிரசாரம் செய்தார்.

கமல்ஹாசன்: அந்த தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்திற்கு மாநிலங்களவை உறுப்பினராக ஒரு இடம் வழங்கப்படும் என கூட்டணியின் தலைமையில் இருந்த திமுக தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதனால் கமல்ஹாசன் திமுக வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்தார். அதுவும் தனது மக்கள் நீதி மய்யம் பிரச்சார வாகனத்தில் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் இவர் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
மாநிலங்களவை எம்.பி: மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கு வேட்பு மனு தாக்கல் செய்யும் போது திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உடன் இருந்தார். அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். இந்நிலையில் இன்று திமுக சார்பில் போட்டியின்றி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு I.N.D.I.A கூட்டணி கட்சியை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
கத்தி: மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று அதாவது ஜூன் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நிர்வாகி ஒருவர் கமல்ஹாசனுக்கு பரிசளிக்க வாள் கொண்டு வந்தார். வாளோடு மேடைக்குச் சென்றவர் கமல்ஹாசன் கையில் வாளைக் கொடுத்து அதனை மேலே உயர்த்திக் காட்டச் சொல்லி கட்டாயப்படுத்த முயற்சி செய்தார். இதனால் கோபப்பட்ட கமல்ஹாசன் வாள் பரிசளித்த நிர்வாகிகளை நோக்கி அது இங்கதான் இருக்கனும் என மேசையை நோக்கி கை காட்டுகிறார் மேலும் கையில் இருக்க கூடாது என்றும் கடிந்து கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











