இசையமைப்பாளராக ஆகாதது ஏன்?.. கமல்ஹாசனிடம் வந்து விழுந்த கேள்வி.. ஏ.ஆர். ரஹ்மான் முடிச்சுவிட்டாரு!
சென்னை: தக் லைஃப் படத்தின் புரமோஷன் பணிகளில் கமல்ஹாசன் படு தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விக்ரம் படத்துக்காக எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எல்லாம் விலகி புரமோஷனை வேகமெடுத்து செய்தாரோ அந்த அளவுக்கு ஆக்டிவாக உள்ளார்.
கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், இந்தியன் 3 படம் வெளியாகாது என்றே பேச்சுக்கள் அடிபடுகின்றன. இன்னும் பல கோடி செலவு செய்து அந்த படம் உருவாக்கப்பட்டு வெளியானாலும், மீண்டும் ரசிகர்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தால் பணமும், உழைப்பும் வீணாகத்தான் போகும் என்கின்றனர்.

தக் லைஃப் படத்தை ரொம்பவே கமல்ஹாசன் நம்பிக் கொண்டிருப்பதால், வேறலெவலில் புரமோட் செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் விமர்சகர் பரத்வாஜ் ரங்கன் சகல கலா வல்லவன் என சொல்லப்படும் கமல்ஹாசன் இசையமைப்பாளராக மட்டும் ஏன் ஆகவில்லை? என்கிற கேள்வியை எழுப்ப அதற்கு கமல்ஹாசன் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் என இருவரும் பதில் அளித்தனர்.
சகல கலா வல்லவன்: கதை எழுதுவது, பாடல்கள் எழுதுவது, பாடுவது, நடனமாடுவது, நடிப்பது, படங்களை இயக்குவது, தயாரிப்பது என சினிமாவில் பன்முகத் திறமைக் கொண்ட சகல கலா வல்லவனாக கமல்ஹாசன் வாழ்ந்து வரும் நிலையில், நீங்க மியூசிக் டைரக்டராக மட்டும் ஏன் ஆகவில்லை என்கிற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தனது ஸ்டைலிலேயே தக் லைஃப் பதிலை கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இசையமைப்பாளராக ஆகாதது ஏன்?: எழுத்தாளனாகத்தான் வேண்டும் என்றும் உதவி இயக்குநராக சேர்ந்து இயக்குநராக வேண்டும் என நினைத்தேன். ஆனால், நல்ல சட்டையை எல்லாம் போட்டு விட்டு பாலசந்தர் நீ நடிகனாக ஆகிவிடு, அதன் பின்னர் நீ என்னவாக நினைக்கிறாயோ ஆகலாம் என்றார். அப்படித்தான் நடிகனாக மாறினேன். இசை எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று. ஆனால், இன்று வரை அது எனக்கு வரமாட்டேன் என்கிறது. ஏ.ஆர். ரஹ்மான், இளையராஜா எல்லாம் ஒரு இசையை எப்படி உருவாக்குகின்றனர் என்பதை உடனிருந்து பார்த்தாலும் அதன் ஆழத்தை பார்த்து அய்யோ நமக்கு இது வேண்டாம்டா சாமி என விட்டு விட்டேன் என்றார்.
ஏ.ஆர். ரஹ்மான் கலாய்ச்சிட்டாரு: எப்படியாவது எனக்கும் இசை கற்றுக் கொடுங்களேன் என இளையராஜா மற்றும் ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களிடம் கண்டிப்பாக கூட கேட்டு பார்த்திருக்கிறேன். அதற்கு ஒருமுறை ஏ.ஆர். ரஹ்மான் என்னை கலாய்ச்சிட்டாரு என வெளிப்படையாகவே அவர் சொன்னதை கூறினார் கமல்ஹாசன். எப்படி இசையைக் கற்றுக் கொள்வது என அந்த மனுஷனிடம் கேட்டால், "பிராக்டீஸ்" என ஒரே வரியில் சொல்லி அசிங்கப்படுத்தி விட்டார் என்றார்.
போட்டுக் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான்: அந்த ஒரு விஷயத்தையாவது எங்களுக்கு விட்டு வைக்க சொல்லுங்க என ஆரம்பத்திலேயே கவுன்ட்டர் கொடுத்த ஏ.ஆர். ரஹ்மான். கமல் சார் வீட்டில் பியானோ எல்லாம் வாங்கி வைத்திருக்கிறார். சீக்கிரமே இசையமைப்பாளராக ஆனாலும், ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என போட்டுக் கொடுத்து தனது தக் லைஃப் வேலையை காட்டி விட்டார். வரும் மே 24ம் தேதி தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் லைவாக பர்ஃபார்மன்ஸ் பண்ணப் போகிறார். ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் தக் லைஃப் படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











