மியூசிக் போடாதது சரியான முடிவு.. கொட்டுக்காளி படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய கமல்!
சென்னை: நாளை அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் படங்களில் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள படங்களில் ஒன்றாக இருப்பது கொட்டுக்காளி. இந்தப் படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை கூழாங்கல் படத்தினை இயக்கிய வினோத் ராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் கூட இல்லை மேலும் பின்னணி இசை இல்லை. காரணம் படத்தில் இசை அமைப்பாளர் இல்லை. படத்தில் லைவ் சவுண்ட் முறை பின்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் கொட்டுக்காளி படத்தினைப் பார்த்த உலகநாயகன் கமல் ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
ஏற்கனவே படத்தைப் பார்த்த கமல்ஹாசன், மூன்று பக்கத்திற்கு படம் குறித்து எழுதி இருந்தார். அதில், " கொட்டுக்காளி' என்ற மத்திய அரசுச் சான்றிதழ் திரையில் தோன்றும் கணத்தில் இருந்து ஆச்சரியங்கள் தொடங்குகின்றன. சான்றிதழில் 103 நிமிடங்கள் 44 செகண்டுகள் என்ற குறிப்பைப் பார்த்ததுமே தமிழ் சினிமா ராக்கூத்து யுகத்திலிருந்து மீண்டு நவீன கதைசொல்லி ஒருவனின் களமாகிவிட்டது புரிகிறது.

தம்பி சூரியைத் தவிர எனக்குத் தெரிந்த முகங்கள் இல்லை மூன்று நிமிடங்களுக்குப் பிறகு அவரும் தெரியவில்லை, பாண்டியன் எனும் கதாபாத்திரம்தான் தெரிந்தார் காலில் கல் கட்டிய சேவல் ஒன்று விடியலுக்காகக் கூட கூவாமல் குழம்பி நிற்கிறது. மறுபுறம் நம் கண்ணுக்குத் தெரியாத கல் ஒன்று காலில் கட்டப்பட்ட பெண் ஒருத்தி அந்தச் . சேவலையே வெறித்துப் பார்க்கிறாள் 'கொட்டுக்காளி டைட்டில் திரையில் கண் இமைக்கும் நேரத்தில் கால் கட்டை உதறித் தப்பிக்கிறது சேவல் வெறித்துப் பார்த்த பெண்ணின் கண்ணில் சின்ன எதிர்பார்ப்பு பின் இரு உறவினர்கள் சேவலை துரத்திப் பிடித்துக்கொண்டு போகிறார்கள் பெண்ணின் கண்ணில் நம்பிக்கை மங்குகிறது. இவள்தான் நாயகி.

பேய்க் கதை: இது பேய்க் கதைதான். காதல் பேய்க் கதை. நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை. டைட்டில் கார்டில் வரும் 'இயற்கைக்கு நன்றி' என்ற வாசகத்தின் பொருள், ஒளிப்பதிவிலும் ஒலிப்பதிவிலும் தெரிகிறது. இயற்கைதான் படத்தின் இசை குலதெய்வக் கோயிலை நெருங்குகையில் சிறுவன் கார்த்திக் வாயால் கொடுக்கும் சினிமாப் பாணி பின்னணி இசைதான் ஒரு சின்னக் கிண்டலுடன் இந்தப் படத்தில் அவை இல்லை என்பதை நினைவுபடுத்துகிறது.
ஆணாதிக்க குறியீடு: ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம், மாறிவிட்டதை காலம் மற்ற பாத்திரங்கள் புரிந்துகொள்ளாவிடினும் பார்வையாளர்களாகிய நமக்கு படம் பிடித்துக் காட்டப்படுகிறது" என பாராட்டி எழுதி இருந்தார். இந்தக் கடிதத்தை நடிகரும் கொட்டுக்காளி படத்தின் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சரியான முடிவு: இதுமட்டும் இல்லாமல் உலகநாயகன் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார். அப்போது, " நிஜமாகவே சினிமா ஒரு தனி மொழி. அது உங்களுக்கு வருது. அதனால நீங்க எப்போதும் விட்டுவிடக்கூடாது. அத செய்யனும்னு தோணுதுனா உங்களுக்கு தனி பாராட்டு. ரொம்ப நல்லா இருக்கு. சில முடிவுகள் எப்படி எடுத்தீங்கனு தெரியல. மியூசிக் போடாம இருந்தது எல்லாம் சரியான முடிவு" எனக் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி வேகமாக பரவிவருகின்றது.


Click it and Unblock the Notifications











