ஆள் கலக்கலா இருக்காரே.. சார்லி மகன் திருமணத்தில் கெத்தாக கலந்துகொண்ட கமல் ஹாசன்
சென்னை: தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து கலக்கியவர் சார்லி. இதுவரை ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கும் அவருக்கு பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். காலங்கடந்தும் அவரது நடிப்பு பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சூழல் இப்படி இருக்க அவரது மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. அதில் கமல் ஹாசன் கலந்துகொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியுள்ளது .
வேல்முருகன் தங்கசாமி மனோகர் என்ற இயற்பெயரை கொண்டவர் சார்லி. இவரது சொந்த ஊர் கோவில்பட்டி. சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் உடைய அவர் கல்லூரி படிக்கும்போது ஏகப்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக சிவாஜி கணேசன், முத்துராமன், நாகேஷ் உள்ளிட்ட நடிகர்களை போலவே அச்சு அசலாக இமிட்டேட் செய்து கல்லூரியில் வெகு பிரபலமானார். அதன் பிறகு முழு நேர நாடக நடிகராகி கிட்டத்தட்ட 1000 நாடகங்கள் வரை நடித்திருக்கிறார்.

பாலசந்தரின் அறிமுகம்: சூழல் இப்படி இருக்க இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்போதிருந்து வேல்முருகன் என்பவர் சார்லி என்று மாறினார். முதல் படத்திலேயே தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பாலசந்தர் மட்டுமின்றி ரசிகர்களையும் அதீதமாகவே கவர்ந்துவிட்டார் அவர். அதன்பிறகு தொடர்ந்து பாலசந்தரின் அச்சமில்லை அச்சமில்லை உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார்.
பிஸியான நடிகர்: அதனையடுத்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட சார்லி தன்னுடைய நடிப்பை ஒவ்வொரு படத்துக்கும் மெருகேற்றிக்கொண்டே சென்றார். இதன் காரணமாக அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது. மேலும் காமெடியையும் கலந்துகட்டி கொடுத்ததால் அவரது ட்ராக் காமெடி பக்கமும் திரும்பியது.
சிறந்த நடிகர்: நகைச்சுவையையும் செய்து, குணச்சித்திர கதாபாத்திரத்தையும் செய்வது தமிழில் நாகேஷ், வடிவேலு உள்ளிட்ட வெகு சிலர்தான். அந்த லிஸ்ட்டில் சார்லியும் தவிர்க்க முடியாத இடத்தில் இருப்பார். பிரெண்ட்ஸ் படத்தில் அபாரமான நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்திய அவர்தான், வெற்றிக்கொடிக்கட்டு படத்தில் தனது குணச்சித்திர கதாபாத்திரத்தால் அனைவரையும் கலங்கடித்திருப்பார். இதுபோன்று ஏராளமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 800 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அவர் கடைசியாக ஃபைண்டர் ப்ராஜெக்ட் 1 படத்தில் நடித்திருந்தார்.
மகன் திருமணம்; கமல் என்ட்ரி: அவருக்கு அஜய் தங்கசாமி என்ற மகன் இருக்கிறார். அவருக்கும் பெர்மிசியாடெமி என்பவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. அதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அந்தவகையில் கமல் ஹாசனும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். ஊதா கலர் தொப்பி, வெள்ளை சட்டை, ஊதா ஜீன்ஸ் அணிந்தபடி கமல் ஹாசன் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள், அட உலக நாயகன் கலக்கலா இருக்காரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











