பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்.. உருகிப்போய் இரங்கல் தெரிவித்த நண்பர் கமல் ஹாசன்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் தனது 48ஆவது வயதில் மரணமடைந்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது உடல் நீலாங்கரையில் இருக்கும் அவரின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் சூழலில் திரையுலகத்தை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் நடிகரும் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பருமான கமல் ஹாசன் தனது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.
பாரதிராஜா தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். அவர் இயக்கிய பல படங்கள் மெகா ஹிட்டாகி இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. அவரது படங்கள் என்றாலே கிராமத்து மண் வாசனை வீசும். அவர் எத்தனையோ பேரை திரையுலகில் அறிமுகப்படுத்திய அவர் தனது மகன் மனோஜையும் தாஜ்மகால் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். படத்தின் டைட்டில் கார்டிலேயே உரிமையோடு தனது மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றுதான் ரசிகர்களிடம் சொல்லியிருப்பார்.
பெரிய வெற்றி எதுவும் இல்லை: பாரதிராஜாவின் மகன் என்பதால் மனோஜ் மீது தனித்த கவனம் பலருக்கும் விழுந்தது. ஆனால் தாஜ்மகால் திரைப்படம் சரியாக போகவில்லை. அதுமட்டுமின்றி மனோஜின் நடிப்பும் பெரிதாக யாரையும் கவரவில்லை. இருப்பினும் ரஹ்மானின் இசை காரணமாக அந்தப் படத்துக்கு ஓரளவு அடையாளம் கிடைத்தது. இன்றுவரை மனோஜ் என்றாலே திருப்பாச்சி அருவாள பாடல்தான் நியாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு அப்பட பாடல்கள் காலம் கடந்தும் நிலைத்திருக்கின்றன.

தொடர் நடிப்புதான் இருந்தாலும்: தாஜ்மகால் படம் வெற்றி பெறாவிட்டாலும் மனோஜ் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருந்தார். அந்தவகையில் சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈர நிலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. அதேசமயம் எப்படியாவது திரைத்துறையில் தனக்கான தனியிடத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியோடு இருந்தார் அவர். ஆனால் அவரால் அந்த இடத்தை பிடிக்கவில்லை.
இயக்குநர் மனோஜ்: நடிப்புதான் கைகொடுக்கவில்லை; தந்தை போல் இயக்கத்தில் சாதிக்கலாம் என்கிற திட்டமும் அவருக்கு இருந்தது. ஏற்கனவே மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராக அவர் பணிபுரிந்திருக்கிறார். எனவே அந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அது கைகூடவில்லை. அதனைத் தொடர்ந்து அவரது இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு மார்கழி திங்கள் என்கிற படம் வெளியானது. இதில் பாரதிராஜாவும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அப்படமும் சரியாக போகவில்லை.
இதய அறுவை சிகிச்சை: சூழல் இப்படி இருக்க அவருக்கு சில நாட்கள் முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பிறகு வீட்டில் ஓய்வில் இருந்த அவர் நேற்று உயிரிழந்தர். அவரது உயிரிழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் இன்று அவரது இறுதி சடங்கு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார். அந்த இரங்கல், "நடிகரும் எனது ஆத்ம நண்பர் இயக்குநர் பாரதிராஜாவின் புதல்வனுமான மனோஜ் பாரதிராஜா மறைந்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தனது அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்"என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











