போதைக்கு எதிரான போர்.. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் பொங்கி எழுந்த கமல் ஹாசன்
சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் தங்களது கண்டனத்தை வலுவாக பதித்துவருகின்றனர். அந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனும் காட்டமாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.
குடி பழக்கத்துக்கு அடிமையான ஆண்களால் பல குடும்பங்கள் நடு வீதியில் நிற்கின்றன, பல குழந்தைகளின் கனவுகள் சிதைக்கப்பட்டிருக்கின்றன. குடி குறித்து ஏகப்பட்ட விழிப்புணர்வுகள் செய்யப்பட்டாலும் அந்த விழிப்புணர்வை எல்லாம் கண் துடைப்பாக எடுத்துக்கொண்டு ஆண்கள் பலர் டாஸ்மாக்கை நோக்கியும், போதையை நோக்கியும் படையெடுக்கத்தான் செய்கிறார்கள். டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவே தரமற்றதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு சமீபகாலமாக பெருகிவரும் சூழலில் கள்ளச்சாராயத்தின் புழக்கமும் அதிகரித்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி சம்பவம்: கள்ளச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக இறந்திருக்கிறார்கள் கள்ளக்குறிச்சியில். அந்த மாவட்டத்தில் இருக்கும் கருணாகுளத்தில் பலர் கள்ளச்சாராயம் குடித்திருக்கிறார்கள். குடித்துவிட்டு வந்து வீட்டில் படுத்தவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றெரிச்சல் உள்ளிட்டவைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனையடுத்து அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதிக்கப்பட்டனர்.
கொத்து கொத்தாக சாவு: மருத்துவமனைகளில் கிட்டத்தட்ட 100 பேர் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 36 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் பலருக்கு உடல்நிலை அபாய கட்டத்தை தாண்டாததால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுக மீது கடுமையான விமர்சனங்களை பலதரப்பட்டவர்கள் வைத்துவருகிறார்கள்.
அமைதி காத்த நடிகர்கள்: இந்த சம்பவத்துக்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பலரும் கொந்தளித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் முக்கியமான நடிகர்களில் ரஜினிகாந்த், சூர்யா, சத்யராஜ் உள்ளிட்டோர் எந்த குரலையும் எழுப்பாமல் இருக்கிறார்கள். அதேசமயம் நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
கமல் கண்டனம்: இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ள செய்தி தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சை பெறுவோர் விரைவில் நலமடைய விழைகிறேன்.
போதைக்கு எதிரான போர்: தமிழ்நாட்டில் இப்படியொரு துயரம் இன்னொருமுறை நிகழாத வண்ணம் கள்ளச்சாராய வியாபாரிகளை தமிழ்நாடு அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதை பழக்கத்துக்கு அடிமையாகியிருப்பவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான மறுவாழ்வு மையங்கள் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். போதைக்கு எதிரான போரில் நாம் ஒவ்வொருவரும் ஈடுபட வேண்டிய தருணம் இது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











