Bhavatharini - பவதாரிணி உயிரிழப்பு.. இளையராஜாவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய கமல் ஹாசன்
சென்னை: பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி பித்தப்பை புற்று நோய் காரணமாக அண்மையில் இலங்கையில் உயிரிழந்தார். அதனையடுத்து அவரது உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான பண்ணைபுரத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சூழலில் நடிகரும், இளையராஜாவின் நெருங்கிய நண்பருமான கமல் ஹாசன் நேரில் சென்று இளையராஜாவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி. ராசய்யா படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமான அவர் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். பாரதி படத்தில் இடம்பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார். பாடகியாக மட்டுமின்றி பத்து படங்களுக்கு இசையமைக்கவும் செய்திருக்கிறார். பவதாரிணியின் குரலில் எப்போதும் ஒரு தனித்துவம் இருக்கும் என்று ரசிகர்கள் பெரும்பாலும் கூறுவதுண்டு.

உடல்நல குறைவு: இந்தச் சூழலில் அவருக்கு கடந்த சில வருடங்களாகவே உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. ஆரம்பத்தில் பெரிதாக யாருமே அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் நிலைமை தீவிரமடைந்த பிறகு மருத்துவமனையில் சோதித்து பார்த்தபோது பவதாரிணிக்கு பித்தப்பை புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி அந்த புற்றுநோய் நான்காவது கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள் என்று பரவலான பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
உயிரிழப்பு: பவதாரிணிக்கு புற்றுநோய் என்பதை அறிந்துகொண்ட பிறகு அவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என அனைத்து வழிகளிலும் போராடியது இளையராஜாவின் குடும்பம். அந்தவகையில் ஆயுர்வேத சிகிச்சை அளிப்பதற்காக இலங்கைக்கு அழைத்து சென்றனர். அங்கு சில வாரங்கள் அவர் சிகிச்சையில் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு இளையராஜா வாழ்க்கையில் பெருத்த இடியாக இறங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.
நல்லடக்கம்: இலங்கையில் வைக்கப்பட்டிருந்த பவதாரிணியின் உடல் இந்தியா கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக சென்னையில் இருக்கும் இளையராஜாவின் வீட்டில் முதலில் வைக்கப்பட்டது. பிறகு அவசர ஊர்தியில் வைத்து சொந்த ஊரான பண்ணைபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இளையராஜாவின் தாய் சின்னத்தாயி, மனைவி ஜீவா ஆகியோரின் சமாதிக்கு அருகே பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டபோது இளையராஜா குடும்பத்தினர் சோகத்துடன் பாடல்களை பாடினர்.
கமல் ஹாசன் இரங்கல்: இதற்கிடையே பவதாரிணியின் உடல் சென்னை வைக்கப்பட்டிருந்தபோதும் சரி, பண்ணைபுரத்தில் அடக்கம் செய்யப்பட்டபோதும் சரி கமல் ஹாசனால் நேரில் செல்ல முடியவில்லை. அப்போது அவர் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஷூட்டிங்கிலிருந்து சின்ன பிரேக் அவர் எடுத்திருப்பதாக தகவல் பரவிய சூழலில், சென்னையில் இருக்கும் இளையராஜாவின் வீட்டுக்கு சென்று பவதாரிணியின் உயிரிழப்புக்கு ஆறுதல் தெரிவித்தார். அதனையடுத்து அமெரிக்காவுக்கு அவர் புறப்பட்டு சென்றார்.
இளையராஜாவை யார் தேற்றுவார்?: இளையராஜா தனது மூன்று பிள்ளைகளிடமுமே பாசமாக இருப்பவர். அதில் பவதாரிணி அவருக்கு கொஞ்சம் ஸ்பெஷல் என்றே கூறப்படுகிறது. எந்த வேலையாக இருந்தாலும் எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் பவதாரிணியை பார்த்தால் அவர் ரிலாக்ஸ் ஆகிவிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள். அப்படிப்பட்ட பவதாரிணி உயிரிழந்தது இளையராஜா வாழ்க்கையில் ஆற்ற முடியாத சோகம்; நிரப்ப முடியாத வெற்றிடம் என்றே திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது. மேலும் ஊரில் உள்ளவர்களின் சோகத்தையெல்லாம் தனது இசை கொண்டு தேற்றிய இளையராஜாவை இப்போது தேற்றப்போவது யார் என்று வேதனையுடன் ரசிகர்கள் கூறிவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











