இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்தநாள்.. நெகிழ்ச்சியோடு பேசிய கமல் ஹாசன்
சென்னை: சினிமாவின் மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவர் கே.பாலசந்தர். 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் அவர் இயக்குநர் சிகரம் என்று ரசிகர்களாலும், திரைத்துறையினராலும் அழைக்கப்படுபவர். இயக்குநராக மட்டுமின்றி உத்தம வில்லன், ரெட்டைச்சுழி உள்ளிட்ட படங்களில் நடிகராகவும், தனது திறமையை நிரூபித்தார். இந்தச் சூழலில் அவரது 94ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கமல் ஹாசன் நெகிழ்ச்சியோடு பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்கியவர் கே.பாலசந்தர். தஞ்சை மாவட்டம் நன்னிலத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர் ஆரம்பத்தில் நாடகங்கள் போட்டவர். அவர் எழுதி, இயக்கிய நாடகங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அதனையடுத்து சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்த அவர், நீர்க்குமிழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே பெரும் வெற்றி பெற்றது.

இரு துருவங்களை உருவாக்கியவர்: பல படங்களை இயக்கிய கே.பாலசந்தர்தான், இந்திய சினிமாவின் இரு துருவங்களாக தற்போது விளங்கிக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த்தையும், கமல் ஹாசனையும் சினிமாவில் நடிகர்களாக அறிமுகப்படுத்தினார். அதேபோல் ஏராளமான நடிகைகளையும் அறிமுகப்படுத்திய அவர் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர். அவரது படங்களை இப்போது பார்த்தாலும் பல பாடங்களை சொல்லிக்கொடுக்கும் வல்லமை வாயந்தது.
பாலசந்தரின் பொய்: கே.பாலசந்தர் கடைசியாக பொய் என்ற படத்தை இயக்கினார். அந்தப் படம் 2006ஆம் ஆண்டு வெளியானது. அதனையடுத்து குசேலன், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தார். இயக்கத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் தனது முத்திரையை பதித்த அவர் 9 தேசிய விருதுகளையும், 12 பிலிம்பேர் விருதுகளையும், ஒரு தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றிருக்கிறார். வயோதிகம் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார்.
நடிகராக பாலசந்தர்: இயக்குநர் என்பதோடு மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கியவர். ரெட்டைச்சுழி, உத்தம வில்லன் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்தார். ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது இழப்பு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியதாக திரைத்துறையில் உள்ளவர்கள் சோகம் அடைந்தார்கள். சூழல் இப்படி இருக்க அவரது 94ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
கமல் ஹாசன் வீடியோ: அதனையொட்டி பலரும் அவர் குறித்து பேசிவருகின்றனர். அந்தவகையில் நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "பாலசந்தர் பற்றி 9ஆம் தேதி (பிறந்தநாள்) மட்டும்தான் பேச வேண்டும் என்று நான் நாள் குறித்ததில்லை. ஏனெனில் நான் அவரைப் பற்றி பேசாத நாளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஏகப்பட்ட பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதனால் தனக்கு எந்த பயனும் இல்லை தன்னுடைய தொழிலுக்குத்தான் பயன் என்பதை தெரிந்தே செய்தார்.
வெளியிலும் மிகப்பெரிய குடும்பத்தை அவர் சம்பாதித்த்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார். சென்றிருக்கிறார் என்பதைவிடவும் அவர் எங்களோடு இன்னமும் இருக்கிறார் என்பதுதான் உண்மை. இன்று அவரது பிறந்தநாள்" என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கிடையே பாலசந்தர் இறப்புக்கு கமல் ஹாசன் வராததையும் சிலர் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டிவருவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











