Indian 2: 400 கோடி வசூல் செய்ததா இந்தியன் 2? போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்.. என்ன கமல் சார் இதெல்லாம்?
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளியான படங்களில் பெரிய நடிகர்களின் படம் என்றால் அது, பொங்கலுக்கு தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படம்தான். இதை தவிர மற்ற படங்கள் அனைத்தும் சிறிய பட்ஜெட் படங்களாக இருந்தது. மேலும் வளர்ந்து வரும் கதநாயகர்களின் படங்களாக இருந்தது. இப்படியான நிலையில் கடந்த 12ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் இந்தியன் 2.
படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், ரிஷிகாந்த், அயன் ஜெகன், விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இந்தப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தபடம் எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மட்டும் இல்லாமல், திரைத்துறையினர் மத்தியிலும் இருந்தது. ஆனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் எதிர்மறையான விமர்சனங்களே கிடைத்தது.
மேலும் பல இடங்களில் லாஜிக் செட் ஆகவில்லை, படத்தின் நீளம் அதிகமாக உள்ளது எனக் கூறினர். இதனால் படத்தின் நீளத்தில் இருந்து 12 நிமிடங்கள் குறைக்கப்பட்டு படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இது ரசிகர்களைக் கவரும், தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் "நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே மன்னா" என்ற சினிமா வசனத்தைப்போல் ஆகிவிட்டது.

ஓடிடி ரிலீஸ்: படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து தியேட்டரைவிட்டே பெரும்பாலும் வெளியேறிவிட்டது. படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் படம் தியேட்டரை விட்டு வெளியேறிவிட்டதால் ஒருவாரம் முன்னரே நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

400 கோடி வசூல்: இப்படி தியேட்டரில் படு தோல்வி அடைந்த இந்த படத்தின் வசூல் தொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் எந்த தகவலையும் இதுவரை வெளியிடாத நிலையில், சென்னையில் உள்ள உலக நாயகன் கமல் ரசிகர்கள், இந்தியன் 2 படம் இதுவரை ரூபாய் 400 கோடிகளை வசூல் செய்துள்ளதாக போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் வெறுப்பைப் பரப்பினாலும் நெருப்பிடம் பலிக்காது என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்தியன் 2 படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ரூபாய் 220 கோடியும் உலகம் முழுவதும் தியேட்டரில் ரூபாய் 180 கோடியும் வசூல் செய்து மொத்தம் ரூபாய் 400 கோடிகளை வசூல் செய்துள்ளது என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1000 கோடி வசூல்: இந்த போஸ்டரின் புகைப்படத்தினை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவுக்கு இவண், தக் லைஃப் தண்டபானி என கேப்ஷனும் இட்டுள்ளார். மேலும், " இது ஒரு வியாதியாவே ஆயிடுச்சு எல்லாருக்கும்.. இப்டிலாம் தனக்குத்தானே பில்டப் பண்ணி இமேஜ் காமிச்சு, நான் தான் பெரிய ஆளுனு காமிச்சு என்னடா பண்ணப்போறீங்க.. தன்னைப் பெரிய ஆளாக சித்தரிக்க முயல்வதை விட பெரியக் கோமாளித்தனம் வேறேதுமில்லை" என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவரோ சொல்றதுதான் சொல்றீங்க 1000 கோடினு சொல்லிவிடவேண்டியதுதானே என கமெண்ட் செய்துள்ளார். தற்போது ப்ளூ சட்டை மாறன் பகிர்ந்துள்ள இந்த போஸ்டர் தொடர்பான பதிவு இணையத்தில் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா உலகில் பலரிடம் பேசுபொருளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











