Thug Life: மொழி குறித்து தெரிந்து தான் பேசினேன்.. எங்களிடம் படை வீரர்கள் இருக்கிறார்கள்.. கமல் சூளுரை!
சென்னை: கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள படமான தக் லைஃப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி குறித்து அவர் பேசியது சர்ச்சையாக மாற, கர்நாடகாவில் மட்டும் படம் வெளியாகாது என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. இந்நிலையில் படக்குழு சார்பில் இன்று வைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசன் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, நாசர், வையாபுரி, அசோக் செல்வன், அபிராமி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் இடம் பெற்றுள்ள 9 பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் கடந்த மாதத்தில் இருந்தே நடைபெற்று வந்த நிலையில் இன்று அதாவது ஜூன் 4ஆம் தேதி படத்தின் புரோமோசன் வேலைகளை படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி முடித்தார்கள்.
அப்போது பேசிய கமல்ஹாசன், " படம் எப்படி இருக்குமோ என்ற அங்கலாய்ப்பில் யாருமே பேசவில்லை என்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. உங்களின் எதிர்பார்ப்பை உங்கள் கண்களின் மூலம் காட்டுகிறீர்கள். இந்த படத்தில் நடித்தவர்கள் பணியாற்றியவர்கள் என அனைவரும் திறமையானவர்கள். இங்கு வந்து கற்றுக் கொள்ளலாம் என நினைத்தவர்கள் இல்லை இவர்கள். அவர்களுடன் பணியாற்றும்போது அவர்கள் முகத்தில் இருந்த சந்தோஷம் பெரும் தொற்று, அது மொத்த யூனிட்டுக்கு தொற்றிக் கொண்டது.

படைவீரர்கள்: கேமராவை மட்டுமல்ல தமிழ் சினிமாவையும் புரட்டிப் போட வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. அதற்கு முயற்சி செய்து கொண்டு உள்ளோம். ஒரு ஆளாக தமிழ் சினிமாவை புரட்டிப் போட முடியாது. யாராவது உதவி வேண்டும். அப்படி கிடைத்தால்தான் அசைத்து பார்க்கவாவது முடியும். அப்படிப் பார்த்தால் எங்களுக்கு படை வீரர்களே கிடைத்துள்ளார்கள். சர்வதேச அளவிற்கு பணியாற்றியுள்ளார்கள். வெளிநாட்டினர் இங்கு வந்து பணியாற்றினார்கள் என்பதை விடவும், இங்கிருப்பவர்கள் வெளிநாட்டினர் பாராட்டும் அளவுக்கு பணியாற்றியுள்ளார்கள். நாசருக்கு நாயகன் படம் எப்படி இருந்ததோ அதுபோல எனக்கு இந்த படத்தின் மூலம் மணிரத்னம் படத்தில் நடித்ததில் மகிழ்ச்சி. 40 ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞராக இருந்த மணிரத்னம் இப்போது சினிமா ஞானியாக உள்ளார்.
நடிகர்கள் திறமை: அதேபோல் ரவி.கே. சந்திரன் இந்நேரம் அமெரிக்காவில் படம் எடுத்துக் கொண்டு இருக்க வேண்டியவர். 20 ஆண்டுகளுக்கு முன்னரே மருதநாயகம் படத்தில் இருவரும் பணியாற்றி முடித்திருக்க வேண்டியது. ஆனால் இந்த படத்தின் மூலம் அவரது ஒளிப்பதிவில் முழுவதுமாக ஒரு படத்தில் நடித்துள்ளேன். யார் யாரோ வெல்கிறார்கள் என்பதும் சரிதான். ஆனால் சினிமா வெல்ல வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். படம் வெளியான பின்னர் படத்தில் நடித்தவர்கள் டெக்னீசியன்ஸ் என அனைவர் குறித்தும் அவர்களின் திறமை குறித்தும் பேசுகிறேன்.
தமிழனாக என் கடமை: எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ் நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும். மேடையில் பேசும்போது உயிரே, உறவே, தமிழே என்று பேசியதையும் நான் முழுமையாக உணர்கிறேன். நாம் இன்னும் பேச வேண்டியது நிறைய உள்ளது. அதற்கான நேரத்தை ஏற்பாடு செய்து கொடுப்பது என் கடமை தமிழனாக" என்று பேசினார். இவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் பாராட்டுகள் குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











