Rolex க்கு ரோலெக்ஸ் வாட்ச் பரிசளித்த கமல்.. நெகிழ்ந்து போன சூர்யா.. விக்ரம் 3 லோடிங்!
சென்னை: விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு நடிகர் கமல்ஹாசன் ரோலெக்ஸ் வாட்ச் பரிசளித்து அசத்தி உள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
200 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டையை விக்ரம் திரைப்படம் நிகழ்த்தி உள்ள நிலையில், தயாரிப்பாளர் கமல் படக்குழுவினருக்கு ஏகப்பட்ட பரிசுகளை அள்ளி வழங்கி வருகிறார்.

சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்
விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சையே பரிசாக வழங்கி உள்ளார் கமல்ஹாசன். ரோலெக்ஸுக்கே ரோலெக்ஸ் வாட்ச்சா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு இன்றும் #Rolex ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்

புகைப்படங்களை வெளியிட்ட சூர்யா
கமல்ஹாசன் தனக்கு ரோலெக்ஸ் கடிகாரத்தை பரிசாக அளித்து, அதனை தனது கையில் அணிவித்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். விக்ரம் படத்தின் வெற்றியை முன்னிட்டு கமல்ஹாசன் தொடர்ந்து இதுபோன்ற பரிசுகளை வழங்கி வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் உடன்
சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சை கமல் பரிசளித்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் உடன் சென்றுள்ளார். மூவரும் இணைந்து எடுத்துள்ள புகைப்படத்தை பார்த்ததுமே ரசிகர்கள் விரைவில் விக்ரம் 3 ஆரம்பிக்க வேண்டும் என அன்புக் கட்டளை போட்டு வருகின்றனர். சமீபத்தில் வீடியோ மூலம் நன்றி தெரிவித்த கமலும் இதனை உறுதி செய்திருந்தார்.

சம்பளமே வாங்கல
சூர்யா ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு ரூபாய் கூட சம்பளமே வாங்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், புதிய ரோலெக்ஸ் கடிகாரத்தை பரிசாக அளித்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் கமல். விக்ரம் 3 படத்தில் சூர்யா நடிக்க அவருக்கு 40 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அடுத்து யாருக்கு என்ன பரிசு
லோகேஷ் கனகராஜுக்கு கார் பரிசளித்த கமல் அவரது உதவி இயக்குநர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசாக 13 பேருக்கு வழங்கி உள்ளார். விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், அவர்களுக்கு என்னவெல்லாம் பரிசு கொடுக்கப் போகிறார் கமல் என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











