Sivakarthikeyan - சிவகார்த்திகேயனின் மைண்ட் வாய்ஸ் ஆகிவிட்டாரா கமல் ஹாசன்?.. ஆச்சரிய அப்டேட் இதோ
சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் மாவீரன் படத்தில் கமல் ஹாசனை உள்ளே கொண்டு வரும் வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியிருப்பதாகவும். அது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் எனவும் கூறப்படுகிறது. மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார்.
சின்னத்திரையில் களமிறங்கி வெள்ளித்திரைக்கு வந்தவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் கடும் போராட்டங்களை சந்தித்த அவர் ஒருகட்டத்தில் நடனம், நடிப்பு என தனது திறமையை வளர்த்துக்கொண்டார். அதன் காரணமாக, சில வருடங்களில் காணாமல் போய்விடுவார் என கணிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் இப்போது 100 கோடி ரூபாய் வசூலிக்கும் கதாநாயகர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

அடி வாங்கிய பிரின்ஸ்: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் கொடுத்த கமர்ஷியல் வெற்றி சிவகார்த்திகேயனை அதே பாதையில் பயணிக்க வைத்தது. அவரும் சரியான கணிப்போடு அந்தப் பாதையில் சென்று வெற்றி படங்களையும் கொடுத்தார். அப்படி அவர் நடித்த டாக்டர், டான் ஆகிய படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் கடைசியாக அவர் நடித்த பிரின்ஸ் படம் பலத்த அடி வாங்கியது. சிவாவின் கேரியரில் உச்சபட்ச தோல்வியாக பிரின்ஸ் படமே கருதப்படுகிறது.
சிவகார்த்திகேயன் மாவீரன்: அந்தப் படம் கொடுத்த அடியால் சுதாரித்துக்கொண்ட சிவகார்த்திகேயன் அடுத்ததாக தான் தேர்ந்தெடுக்கும் கதையில் கவனமாக இருக்கிறார். அதன்படி மண்டேலா படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கிறார். மாவீரன் என்று பெயரிடப்பட்டிருக்கும் படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவந்தது. தற்போது படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் மைண்ட் வாய்ஸ் கமல்: இந்நிலையில் மாவீரன் படத்தில் கமல் ஹாசனை உள்ளே கொண்டு வருவதற்கு படக்குழு திட்டமிட்டிருக்கிறாராம். ஆனால் படத்தில் கமல் ஹாசன் நடிக்கவில்லையாம். மாறாக குரல் கொடுக்கப்போகிறாராம். அதாவது படத்தில் சிவகார்த்திகேயன் மைண்ட் வாய்ஸ் சொல்வதை கேட்டு நடப்பதுபோல் சில காட்சிகள் இருக்கின்றனவாம். எனவே அந்த மைண்ட் வாய்ஸ் குரல் கமல் ஹாசனின் குரலாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணிய படக்குழு இந்த முடிவை எடுத்திருக்கிறதாம்.
விரைவில் பேச்சுவார்த்தை: கமல் ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கிற்காக தென் ஆப்பிரிக்காவில் இருக்கிறார். அவர் சென்னை திரும்பியதும் சிவகார்த்திகேயனை வைத்து இந்தப் பேச்சுவார்த்தை நடக்கலாம் எனவும்; சிவகார்த்திகேயன் அடுத்ததாக கமலின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதால் மாவீரனுக்குள் கமல் ஹாசன் குரல் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது. இந்த தகவலை பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டார்.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்: மாவீரன் படத்தை முடித்த பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக கமல் ஹாசனின் தயாரிப்பில் நடிக்கவிருக்கிறார். அந்தப் படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் காஷ்மீர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











