‘உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு…’ எஸ்பி பாலசுப்ரமணியம் பிறந்தநாள்.. கமல் உருக்கம்!
சென்னை: "இந்த தேகம் மறைந்தாலும்.. இசையாய் மலர்வேன்" என பாடிய பாடும் நிலா பாலு மறைந்தாலும் அவரது பிறந்தநாளான இன்று திரை பிரபலங்கள் முதல் இசை ரசிகர்கள் வரை என பலரும் அவரது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உருக்கமான வாழ்த்து மடல் வைரலாகி வருகிறது.
பாடகி சித்ரா உள்ளிட்ட பலரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பிறந்த தினமான இன்று அவரது நினைவுகளை நினைத்து உருகி வருகின்றனர்.

எஸ்பிபி பிறந்தநாள்
1946ம் ஆண்டு ஜூன் 4ம் தேதி நெல்லூரில் பிறந்த பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் 75வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. எம்ஜிஆர் முதல் இப்போது உள்ள பல இளம் நடிகர்களுக்கும் குரல் கொடுத்த இசை ஜாம்பவான் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அன்னையா அன்னையா
"அன்னையா அன்னையா என நான் அழைத்த பாட்டு அண்ணன், எண்ண இயலாப் பாடல்களில் என்னோடு இரண்டில்லாமல் கலந்த குரல்வண்ணன், எஸ்பிபிக்கு இன்று பிறந்த நாள். ஆயிரம் நினைவுகள் மனதில் ஓடுகின்றன. 'உனக்கென்ன மேலே நின்றாய் ஓ எங்கள் பாலு...'" என நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான வாழ்த்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Recommended Video

அண்ணன் தம்பி
"நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை" என கமல்ஹாசன் மற்றும் எஸ்பிபி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து மலரும் நினைவுகளை நினைத்து உருகி வருகின்றனர் ரசிகர்கள். பாலு சார் நம்முடன் இல்லை என்கிற நினைப்பே இல்லை என்றும் தினமும் அவரது குரலை கேட்டுக் கொண்டே இருக்கின்றோம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

என்றென்றும் எஸ்பிபி
போகும் பாதை தூரமே.. வாழும் காலம் கொஞ்சமே என எஸ்பிபி பாடிய பாடல் வரிகளையே போட்டு கமல் ரசிகர்கள் எஸ்பிபியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது அழியாத நினைவுகளை அசை போட்டு வருகின்றனர். மக்கள் மனதில் என்றென்றும் நீங்காத நினைவாக எஸ்பிபி என்றும் இருப்பார் என்பது நிதர்சனம்.


Click it and Unblock the Notifications











