கமலின் கனவுப்படம் மருதநாயகம்.. வேலைகளை ஆரம்பிக்கவிருக்கிறாரா?.. அவரே சொன்ன சூப்பர் விஷயம்
சென்னை: கமல்ஹாசனின் கனவுப்படமாக கருதப்படுவது மருதநாயகம். 90களின் இறுதியில் அந்தப் படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அப்படத்தின் தொடக்க விழாவுக்குத்தான் இங்கிலாந்து ராணி வந்திருந்தார். அதிக பட்ஜெட், அப்போதைய காலகட்டத்தில் சாத்தியமில்லாத சில விஷயங்கள் காரணமாகவே படம் அடுத்தக்கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் அதுகுறித்து விமான நிலையத்தில் பேசியிருக்கிறார் கமல்.
கமல்ஹாசன் எத்தனையோ படங்களில் நடித்திருக்கிறார்; நிறைய படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால் அவரது கனவுப்படம் என்றால் மருதநாயகம்தான். ஆங்கிலேயே காலத்தில் வாழ்ந்த மருதநாயகன் என்ற மன்னரை பற்றிய படம் அது. அதனை அவரே இயக்குவதாகவும் இருந்தார். நடிகை அபிராமி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்கவிருந்தார்கள். படத்தின் தொடக்க விழாவெல்லாம் கோலாகலமாக நடந்தது.
இங்கிலாந்து ராணியின் வருகை: சென்னையில் நடந்த தொடக்க விழாவுக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வந்திருந்தது அப்போதைக்கு டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது. அந்தப் புகைப்படத்தை இப்போதும் இணையத்தில் பார்க்கலாம். கண்டிப்பாக இப்படம் வந்தால் தமிழ் சினிமாவின் தரம் எங்கேயோ சென்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. உலக சினிமாவில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையும் அதற்காக இறக்கியிருந்தார்.

பருந்துக்கே அவ்வளவு: படத்தின் வேலைகள் எல்லாம் ஜரூராக நடந்து ஷூட்டிங்கும் தொடங்கியது. படத்தின் டீசர்கூட் வெளியானது. அந்த டீசரில் கமல்ஹாசனை பருந்து ஒன்று கொத்தும் காட்சியை பார்த்து அனைவருமே பதைபதைத்துதான் போனார்கள். உண்மையிலேயே அந்தப் பருந்தை வட மாநிலத்திலிருந்து வரவழைத்திருந்தார் கமல். அதுமட்டுமின்றி உண்மையான காளை மாட்டின் மேல் அரை நிர்வாணத்தோடு கமல் வரும் காட்சியும் பிரமிப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் வெளியான வாரணாசி படத்தின் டைட்டில் டீசரில்கூட அதேபோன்று மகேஷ் பாபு வந்தாலும்; இதெல்லாம் எங்க கமல் எப்போவோ செஞ்சிட்டாரு என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு மருதநாயகம் படம் அனைவரிடமும் ஊறி போயிருக்கிறது. அப்படத்துக்காக ஏகப்பட்ட விஷயங்களை செய்தார்.
பாதியில் நின்ற படம்: எப்படியும் படத்தின் ஷூட்டிங் முடிந்து விருந்து படைப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்போதைக்கு தொழில்நுட்பம் இருந்த நிலைமை, அதீதமான பட்ஜெட் உள்ளிட்ட பல காரணங்களால் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். அது கமலுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்குமே ஏமாற்றமாகத்தான் அமைந்தது. இன்றுவரை அவர் எங்கே சென்றாலும் மருதநாயகம் பற்றி கேள்வி வந்து விழாமல் இல்லை.
செய்தியாளர்கள் சந்திப்பு: இந்நிலையில் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக கோவா சென்றிருக்கிறார். விமான நிலையத்துக்கு வந்த அவரிடம் மருதநாயகம் பற்றி கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தொழில்நுட்பம் முன்னேறியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் மருதநாயகம் படம் சாத்தியமாகலாம் என்பது என்னுடைய நம்பிக்கை" என்றார். அதேபோல் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் அமரன் படம் திரையிடப்படுவது குறித்து பேசிய கமல், "நாட்டுக்காக நாங்கள் அமரன் படத்தை எடுத்தோம். இப்போது நாடு எங்களை கௌரவப்படுத்துகிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











