Citizen - Indian 2: அஜித்தின் சிட்டிசன் தான் இந்தியன் 2 வா? வாங்க அது என்னானு பாக்கலாம்?
சென்னை: 2024ஆம் ஆண்டு முதல் 6 மாதத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் ஒரு சில படங்கள் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் இந்த ஆண்டின் அடுத்த பாதியில் பெரிய ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதில் வரும் 12ஆம் தேதி கமல் ஹாசனின் இந்தியன் 2 படம் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான புரோனோஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் கதையும் அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
அஜித்குமார் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான படம் சிட்டிசன். இந்த படத்தினை சரவண சுப்பையா இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துடன் வசுந்தரா தாஸ், மீனா, நக்மா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் அஜித்தின் கிராமமான அத்திப்பட்டி கிராமத்தினை அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து அழித்துவிடுவார்கள். அதில் இருந்து தப்பித்து வந்த சிறுவன் வளர்ந்து தனது கிராமம் அழியக் காரணமானவர்களை தண்டிக்க முயற்சி செய்வான். அதுவும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வேடத்தில் சந்தித்து அவர்களை தாக்குவதையும் சட்டத்தின் முன் நிறுத்தக் கொண்டு வருவதையும் படமாக்கி இருப்பார்கள்.

இந்தியன் 2: இந்தியன் படத்தில் இந்தியன் தாத்தாவாக உள்ள கமல்ஹாசன் இந்தியன் தாத்தாவின் தோற்றமாக ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட வேடத்திலேயே லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகளை கொலை செய்வார். ஆனால் இந்தியன் படத்தின் நீட்சியாக எடுக்கப்பட்டுள்ள இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் தவறு செய்பவர்களை பல்வேறு வேடங்களில் சென்று தண்டிப்பதைப் போல் காட்டப்பட்டுள்ளது.

சிட்டிசன் - இந்தியன் 2: இதனால் சிட்டிசன் படத்திலும் அஜித் தவறு செய்தவர்களை பல்வேறு வேடங்களில் சென்று தண்டிப்பார். அதேபோல் இந்தியன் 2 படத்திலும் கமல் ஹாசன் பல்வேறு தோற்றங்களில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இரண்டு படங்களின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்குமோ என பேசி வருகின்றனர்.

அதாவது சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி கிராமத்தை அழித்தவர்களை தண்டிக்க அஜித் பல வேடங்களிட்டு குற்றவாளிகளை தண்டிக்க வழி செய்வார். அதேபோல் இந்தியன் 2 படத்தில் லஞ்சம் பெற்ற அதிகாரிகளை கமல் ஹாசன் பல வேடங்களில் சென்று தண்டிக்கிறார். ஆனால் சிட்டிசன் படத்தினை முதலில் கமல் ஹாசனை வைத்துதான் இயக்க சரவண சுப்பையா முடிவு செய்திருந்ததாகவும் அதன் பின்னர்தான் படத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் என நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.

நம்பிக்கை: ரசிகர்கள் மத்தியில் உலா வருவதைப்போல் இரண்டு படங்களின் கதையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கின்றது என்றாலும், ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் படம் உலகத்தரத்திற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக இந்த படத்திற்காக லைகா நிறுவனம் பல கோடிகளைச் செலவு செய்துள்ளதால் படம் பிரமாண்டமான வெற்றியைக் கொடுக்கும் என படக்குழு தரப்பில் நம்பப்படுகின்றது.

நடிகர்கள்: இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெற்றது. படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், ப்ரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, விவேக், மனோ பாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கான முன்பதிவு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் உலா வருகின்றது. இந்த படத்தில் இடம் பெற்ற காலண்டர் பாடல் உலக அளவில் ட்ரெண்ட் ஆனதில் டாப் 2 இடத்தில் இருந்தது.


Click it and Unblock the Notifications











