Kamal Haasan - கமல் நடிக்க வேண்டிய படத்தில் நடித்த ஜீவா - அந்தப் படத்துக்கு இப்படி ஒரு கதையா?
சென்னை: Kamal Haasan (கமல் ஹாசன்) கமல் ஹாசனுக்காக இயக்குநர் ராம் எழுதிய கதையில்தான் நடிகர் ஜீவா நடித்தார் என தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றிய இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் ராம். கவிதை வாசிக்கும் நிகழ்வில் பாடலாசிரியர் நா. முத்துக்குமாருக்கும், இவருக்கும் ஏற்பட்ட பழக்கம் தீவிர நட்பாக மாறியது. அதன் பிறகு முத்துக்குமார் மூலம் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இணைந்தார். அதுமட்டுமின்றி ஒளிப்பதிவு செய்வதை நிறுத்தியிருந்த பாலுமகேந்திரா ராம் சொன்ன ஒரு குறும்பட கதையை கேட்டு ஒளிப்பதிவு செய்யவும் தயாராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கற்றது தமிழ்: முதல் படத்தை சென்சிட்டிவ் சப்ஜெக்ட்டாக எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியமும், தன்னம்பிக்கையும் வேண்டும். அது ராமுக்கு இருந்தது. அதனால்தான் தனது முதல் படமாக கற்றது தமிழ் படத்தை இயக்கியிருந்தார். இந்தக் கதையை கேட்டுவிட்டு, முதல் படத்திலேயே இவ்வளவு ரிஸ்க் எடுக்காதே என்று பாலுமகேந்திரா பயப்படும் அளவுக்கு அந்தக் கதை இருந்தது. இருப்பினும் பிடிவாதமாக அந்தப் படத்தை இயக்கி முடித்தார் ராம்.
பலத்த அடி: இப்போ கொண்டாட்டம்: கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் பெரும் அடி வாங்கியது. ஆனால் படத்தில் பேசப்பட்ட விஷயங்கள் அப்போது யாராலும் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை அல்லது யாருக்கும் பெரிதாக புரியவில்லை. எப்போதுமே ஒரு சிறந்த படைப்பு தாமதமாகத்தான் கொண்டாடப்படும் என்பதற்கு கற்றது தமிழ் மிகச்சிறந்த உதாரணம். அப்போது அடி வாங்கிய கற்றது தமிழ் இப்போது க்ளாசிக் படமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.
சிறந்த நடிகர் ஜீவா: குறிப்பாக பெரிய நடிகர்கள் யாரிடமும் செல்லாத ராம் வளர்ந்துவரும் நடிகராக அந்த சமயத்தில் இருந்த ஜீவாவை ஹீரோவாக நடிக்க வைத்தார். ஜீவாவும் அந்த பொறுப்பை உணர்ந்து தனது ஆகச்சிறந்த நடிப்பை படத்தில் வெளிப்படுத்தியிருப்பார். அவரது கரியரில் மறக்க முடியாத படமாக கற்றது தமிழ் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தப் படத்தின் கதையை கமல் ஹாசனை மனதில் வைத்துதான் ராம் எழுதியிருந்தாராம்.

சந்திக்கக்கூட முடியவில்லை: கற்றது தமிழ் படத்தின் கதையை ராம் உதவி இயக்குநராக இருக்கும்போதே எழுதியிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் கமல் ஹாசனை அவரால் சந்திக்ககூட முடியவில்லையாம். இருந்தாலும் மனம் தளராத ராம் கதையில் யார் நடித்தாலும் படம் கொண்டாடப்படும் என்ற நம்பிக்கை வைத்து ஜீவாவிடம் சென்றிருக்கிறார். கதையை கேட்ட அவரும் உடனே நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு பகிர்ந்திருக்கிறார்.
ராமின் பிற படங்கள்: கற்றது தமிழ் படத்துக்கு பிறகு ராம் தங்கமீன்கள் படத்தை இயக்கினார். அந்தப் படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தரமணி படத்தை இயக்கினார். தற்போது அவர் நிவின் பாலி நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்ததாக நடிகர் மிர்ச்சி சிவாவை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











