வலிமை இயக்குநருடன் இணையும் கமல்ஹாசன்.. என்ன தொடர்ந்து படங்களை கமிட் செய்யறாரு!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து மிகவும் உற்சாகமாக காணப்படுகிறார்.
தன்னுடைய சொந்த பேனரில் அடுத்தடுத்த படங்களை அறிவித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயன், சிம்பு என பட்டியல் நீளுகிறது.
இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை துவங்கும் வகையில் அமெரிக்காவிற்கும் சென்றுள்ளார் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டு இடைவெளிக்கு பின்பு நடித்து சமீபத்தில் வெளியானது விக்ரம் படம். இந்தப் படத்தில் ஒரு குழந்தையின் தாத்தாவாக நடித்திருந்தார் கமல்ஹாசன். இமேஜ் பார்க்காமல் அவர் ஏற்று நடித்த இந்தக் கேரக்டர் மற்றும் அதன் மிரட்டலான செயல்பாடுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

பாகுபலி 2வை பீட் செய்த விக்ரம்
இந்தப் படத்தின் வெற்றி மற்றும் வசூல், அவரது முந்தையப் படங்களை பீட் செய்தது. தமிழில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றிருந்த பாகுபலி 2 படத்தை பின்னுக்குத் தள்ளி தற்போது விக்ரம் படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன்மூலம் தமிழில் அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமை விக்ரம் படத்திற்கு கிடைத்துள்ளது.

கமலின் அடுத்தடுத்த படங்கள்
இந்தப் படத்தை கமல் தனது ராஜ்கமல் இன்டர்நேஷனல் பேனரின்கீழ் தயாரித்திருந்தார். தொடர்ந்து படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது சொந்த தயாரிப்பிலும் தான் தனியாகவும் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை மேற்கொண்டு வருகிறார்.

லோகேஷ் இயக்கத்தில் கமல்
விக்ரம் படத்தை தொடர்ந்து விக்ரம் 3 படமும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ளது. இதை விக்ரம் பிரமோஷனின்போதே கமல் அறிவித்து விட்டார். தற்போது தளபதி 67 படத்தின் சூட்டிங்கில் அடுத்ததாக லோகேஷ் இணையவுள்ள நிலையில், இதை தொடர்ந்தே விக்ரம் 3 படத்தில் அவர் இணைவார்.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்
இதற்கிடையில் கமலின் அடுத்த படத்தை இயக்குநர் மகேஷ் நாரயணன் இயக்கவுள்ளார். இது கமலின் கதை என்றும் அதைத்தான் மகேஷ் நாராயணன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார் கமல். இதன் சூட்டிங் தொடர்பான வேலைகளுக்காக தற்போது கமல் அமெரிக்கா சென்றுள்ளார்.

நீளும் இயக்குநர்கள் பட்டியல்
இதனிடையே, அடுத்தடுத்த படங்களில் கமல் தன்னை கமிட் செய்து வருகிறார். ஷங்கரை தொடர்ந்து பா ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன் என இவரது படங்களின் பட்டியல் நீளுகிறது. இந்நிலையில் இந்த வரிசையில் தற்போது பிரபல இயக்குநர் ஹெச் வினோத்தும் இணைந்துள்ளார்.

கமலுடன் இணையும் ஹெச் வினோத்
தற்போது அஜித்தின் ஏகே61 படத்தை இயக்கிவரும் ஹெச் வினோத், விரைவில் இதன் சூட்டிங்கை முடித்துக்கொண்டு விஜய் சேதுபதியை வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து அவர் கமலுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











