எழுத்தே முதலென முரசறைந்த கலைஞர்.. பிறந்தநாளில் நினைவுகூர்ந்த கமல்ஹாசன்!
சென்னை : கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்றைய தினம் அவரது கட்சி உறுப்பினர்கள், தொண்டர்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Recommended Video
கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. பின்னர் அவர் தனது பெயரை முத்துவேல் கருணாநிதி என்று மாற்றிக் கொண்டார்.
முறையான கல்வி அவருக்கு கிடைக்காத போதிலும் அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த மு கருணாநிதியின் பிறந்தநாளை இன்றைய தினம் கொண்டாடி வருகின்றனர் திமுகவினர். கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் கலைஞரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் சமூக நலப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறந்த அரசியல் தலைவர்
கடந்த 1924 ஜூன் 3ம் தேதி திருக்குவளை என்ற சிறிய கிராமத்தில் பிறந்த கருணாநிதி, இந்திய அளவில் சிறப்பான அரசியல் தலைவராக தன்னை உயர்த்திக் கொண்டார். இவருடைய குடும்பம் ஏழ்மையில் மிகவும் சிரமப்பட்டதால் இவருக்கு இளம் வயதில் முறையான கல்வி கிடைக்கவில்லை. ஆனால் தமிழ் இலக்கியத்தின்மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் கருணாநிதி.

பழமையை கேள்வி எழுப்பிய வசனங்கள்
இந்த ஆர்வம் காரணமாக தமிழ் திரையுலகில் கதை -வசனம் எழுதுபவராக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். இவரது கதைகள் மற்றும் வசனங்கள் விதவை மறுமணம், ஜமீர்தார் முறையை ஒழித்தல் போன்ற பல விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பின.

பராசக்தி வசனங்கள்
தன்னுடைய முதல் படமான பராசக்தியிலேயே வசனங்கள் மூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டார். இந்தப் படம் அந்த காலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் கருணாநிதிக்கு சிறப்பான பெயரை வாங்கிக் கொடுத்தது. படத்தின் நீதிமன்ற காட்சிகள் இந்தப் படத்தின் வசனங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

பன்முகத் திறமை
திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதை தவிர்த்து, கவிதைகள், கடிதங்கள், புத்தகங்கள், வரலாறு, வரலாற்று நாவல்கள், இசை, வசனம் நாடகங்கள், கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றையும் கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார். தொடர்ந்து தமிழக முதல்வராக ஆன பின்பும் பல நலத்திட்டங்களை செய்துள்ளார்.

பல கௌரவங்கள்
திருவள்ளுவருக்கு அஞ்சலி செய்யும்வகையில், வள்ளுவர் கோட்டத்தை நிறுவினார். மேலும் முரசொலி மூலமும் தொடர்ந்து பல விஷயங்கள் குறித்து பேசினார். கடந்த 1970ல் பாரீசில் நடந்த உலக தமிழ் மாநாட்டின் கௌரவ உயர் பதவியாளராக இருந்தார். தொடர்ந்து 2010ல் உலக தமிழ் செம்மொழி மாநாட்டின் கருப்பொருள் பாடலை உருவாக்கினார். இதன் பின்னணி இசையை ஏஆர் ரஹ்மான் அமைத்தார்.

டாக்டர் பட்டம்
அண்ணாமலை பல்கலைகழகம் கருணாநிதியை கௌரவித்து டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. சிறுவயதிலேயே அரசியலில் நாட்டம் கொண்டு பல செயல்பாடுகளில் ஈடுபட்ட இவர் தமிழக முதல்வராக முதல்முறையாக கடந்த 1969ல் பதவியேற்றார். 5 முறை இவர் தமிழக முதல்வராக இருந்துள்ளார்.

நினைவுகூர்ந்த கமல்ஹாசன்
இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் எளிமையில் இருந்து உயர்வுக்கு செல்லலாம் என காட்டிய அரசியலாளர் கருணாநிதி என்று தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்களின் குரல்
மேலும் ஒடுக்கப்பட்டோருக்காகவே ஒலிக்கும் குரலென இருந்த சமூகநீதித் தலைவர், நாடக, திரைக்கலைகளின் மூலம் மொழி வளர்த்த தமிழாளர், எழுத்தே முதலென முரசறைந்த கலைஞர் என்று தெரிவித்துள்ளார். அவரது பிறந்தநாளில் அவரை நினைவுக் கூர்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி பிறந்தநாளில் வெளியான விக்ரம்
இன்றைய தினம் கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. முன்னதாக கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் விக்ரம் படம் வெளியாவது தற்செயலானது என்று கமல்ஹாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











