AVM Saravanan: ஏவிஎம் தோப்பில் நடப்பட்ட சிறு செடி.. வீடியோ வெளியிட்டு கமல் இரங்கல்.. அப்பாவை போல அய்யா
சென்னை: என் அண்ணன்கள் சந்திரஹாசன், சாருஹாசனுக்கு எந்தளவுக்கு மரியாதை மற்றும் மதிப்பு செலுத்துகிறேனோ அதே அளவுக்கு மதிப்பும் மரியாதையும் ஏ.வி.எம். சரவணன் அய்யாவுக்கு செலுத்தி வருபவன் நான், அவரது மறைவு செய்தி என்னை ரொம்பவே மன வேதனையில் ஆழ்த்தி விட்டது என கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏவிஎம் சரவணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு 86 வயதாகிறது. ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா, விஷால், எஸ்.ஏ. சந்திரசேகர், பார்த்திபன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாட்டுக்கு சென்றிருப்பதால் தன்னால் நேரில் வர முடியவில்லை என நடிகர் சரத்குமார் காலையிலேயே தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்தார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ஆழ்ந்த இரங்கலை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
ஏவிஎம் தோப்பில் நடப்பட்ட சிறு செடி: "உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் ஒருவனின் அஞ்சலி" என கேப்ஷன் போடப்பட்டு தனது இரங்கல் வீடியோவை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் தற்போது டெல்லியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நேரில் வர முடியாத சூழலில் வீடியோ மூலம் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். "ஏவிஎம் தோப்பில் நடப்பட்ட பல செடிகளில் நானும் ஒரு சிறு செடி, சரவணன் அய்யாவின் மகன் குகன் எந்தளவுக்கு துக்கம் அடைந்துள்ளாரோ அதில் பங்கு கொள்ள நானும் உரிமை கொண்டாடுகிறேன், சினிமாவுக்குப் பின்னால் இவர் போன்ற பல ஜாம்பவான்கள் சாதித்த சாதனைகள் எல்லாம் எங்களை போன்ற கலைஞர்களுக்குத்தான் நன்கு தெரியும் என கமல் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி: ஏவிஎம் தயாரிப்பில் பல படங்களில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏவிஎம் கடைசியாக பிரமாண்டமாக தயாரித்த சிவாஜி படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், சென்னையில் இருந்த ரஜினிகாந்த் இரங்கல் செய்தி அறிந்ததுமே காலையிலேயே முதல் ஆளாக ஓடோடி வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும், பல சினிமா பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.ஏவிஎம் வளாகத்தில் ஏவிஎம் சரவணன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











