சிக்கலில் இந்தியன் 2.. கைகொடுத்த உதயநிதி.. இசைவெளியீட்டு விழாவில் கமல் பேச்சு!
சென்னை: இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகியுள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டு பின் சிக்கலில் மாட்டிக்கொண்ட போது, உதயநிதி ஸ்டாலின் உதவியதால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது என்று உதயநிதி ஸ்டாலினை பெருமையாக பேசி உள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 96ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, நாசர், சுகன்யா, கவுண்டமணி, செந்தில், மனோரமா என ஏராளமானோர் நடித்திருந்தனர். பாலிவுட், மாலிவுட், டோலிவுட் என அனைவரும் இந்த படத்தை கொண்டாடினார்கள். இதையடுத்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என 2018ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு முதல் படப்பிடிப்பு தொடங்கியது.

அடுத்தடுத்த பிரச்சனை: இதையடுத்து 2020ம் ஆண்டு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது, கிரேன் சரிந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 2 பேர் உயிரிழந்தனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா பரவியது. பின் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அது நீதிமன்றம் வரை சென்று ஒரு கட்டத்தில் இந்தியன் 2 திரைப்படம் கைவிடும் நிலைக்கே சென்றுவிட்டது.
உதயநிதி ஸ்டாலின்: அதன்பின் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்ததை தொடர்ந்து, இந்த நேரத்தில் இந்தியன் 2 படம் வெளியானால் நன்றாக இருக்கும் என்று கமலின் ரசிகர்கள் நினைத்தது போல, உதயநிதி ஸ்டாலினும் நினைத்து, இந்தியன் 2 படத்தை கையில் எடுத்து தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிப்பதாக அறிவித்து படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டன.
உறுதுணையாக இருந்த உதய்: கிட்டத்தட்ட 6 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ஜூலை 12ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 இசைவெளியீட்டு விழாவில் பாராட்டி பேசினார். அதில், இந்தியன் 2 படம் சிக்கலில் மாட்டிக்கொண்டு இரண்டு, மூன்று வருடமாக நகராமல் இருந்த போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதவியதால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்திக்கிறார்கள். அந்த பொறுப்பில் அவர் வெற்றி பெற வேண்டும் எங்களுக்கு அவர் உறுதியாக இருந்தது போல, அவரோடு நாங்களும் உறுதுணையாக நிற்க வேண்டிய சூழல் வரும் என்று கமல் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











