ஜனநாயகனுக்கு வந்த சென்சார் பிரச்னை.. குரல் கொடுத்த கமல்ஹாசன்.. ஓபனா அடிச்சிருக்காரு
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் நேற்று வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் அதற்கு சென்சார் கிடைக்காததால் ரிலீஸிலிருந்து தள்ளிப்போயிருக்கிறது. பொங்கலுக்காவது வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் அதற்கும் வாய்ப்பு இல்லை. இந்நிலையில் சென்சார் விஷயம் பற்றி கமல்ஹாசன் தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். பகவந்த் கேசரி படத்திலிருந்து சில பகுதிகளை சேர்த்தும், தனது கதையை இணைத்தும் இப்படத்தை அவர் உருவாக்கியிருக்கிறார். இதில் விஜய்யுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நாசர், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரிக்க ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார்.
சென்சார் பிரச்னை: படத்தை ஜனவரி ஒன்பதாம் தேதி வெளியிட படக்குழு பிளான் செய்து அறிவித்தும்விட்டது. சென்சாருக்கு அனுப்பியபோது அவர்கள் சொன்ன மாற்றங்களை செய்து மறு ஆய்வு கமிட்டிக்கு அனுப்பியது. அவர்களும் படத்தை பார்த்துவிட்டு சான்றிதழ் தரவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல்; வேறு வழியே இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பட தயாரிப்பு நிறுவனம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு: முதலில் வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அதனையடுத்து சென்சார் அதிகாரிகள் மேல்முறையீடு செய்தார்கள். அந்த வழக்கை விசாரித்த நீதிபதியோ ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் 21ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். எனவே பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் ரிலீஸாகாது என்பதை விஜய் ரசிகர்கள் வருத்தத்தோடு ஏற்றுக்கொண்டார்கள்.
பலரும் எதிர்ப்பு: சென்சார் அதிகாரிகள் இப்படி வேண்டுமென்றே செய்வதாலும், இதற்கு பின்னணியில் அரசியல் இருப்பதாலும்தான் இந்தப் பிரச்னை தீரவே இல்லை என பலரும் சொன்னார்கள்.மேலும் இது ஜனநாயகமே இல்லை; வேண்டுமென்றே விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறார்கள் என ஒரு தரப்பினரும்; சென்சார் அதிகாரிகளை கடுமையாக கண்டித்து இன்னொரு தரப்பினரும் கருத்து தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
கமலின் கருத்து: அவர் அந்த அறிக்கையில், "இந்திய அரசியலமைப்பு சட்டம் கருத்து சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அந்த சுதந்திரம் பகுத்தறிவின் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடுகளால் அது பாதிக்கப்படக்கூடாது. இத் ஒரு தனிப்பட்ட திரைப்படம் தொடர்பான விஷயம் மட்டும் இல்லை. ஜனநாயக நாட்டில் கலைக்கும், கலைஞர்களுக்கும் நாம் வழங்கும் மரியாதையை இது வெளிப்படுத்துகிறது. தணிக்கை சான்றிதழ் வழங்க தெளிவான காலக்கெடு இருக்க வேண்டும். மதிப்பீடு வெளிப்படையாக நடக்க வேண்டும். மேலும் படத்தில் எந்த மாற்றம் பரிந்துரைக்கப்பட்டாலும் அதற்கான எழுத்துப்பூர்வமான, நியாயமான விளக்கம் அளிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











