தவெக மாநாட்டில் விஜய் பேச்சு.. முகவரி இல்லாத லெட்டர்.. தக் லைஃப் கொடுத்த கமல்ஹாசன்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடந்தது. இதில் கிட்டத்தட்ட அரைமணி நேரம் பேசிய விஜய்; ஒரு இடத்தில் கமல்ஹாசனை தாக்கி பேசுவது போன்று இருந்தது. திமுகவுடன் கமல் நெருக்கம் காட்டுவதால்தான் அவரை மறைமுகமாக விஜய் விமர்சித்திருக்கிறார் என்ற பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. சூழல் இப்படி இருக்க தரமான பதிலடியை கமலும் கொடுத்திருக்கிறார்.
அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்யின் ஒவ்வொரு மூவையும் பலரும் கவனித்துவருகிறார்கள். அவர் செய்யும் செயல்கள் பல விமர்சனத்தை சந்தித்துவந்தாலும்; அவரது தொண்டர்களாகிய ரசிகர்கள் தங்கள் தளபதியை எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் இருந்துவருகிறார்கள். அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்த்லில் எப்படியாவது தவெக வென்றுவிட வேண்டும் என்று உழைத்துவருகிறார்கள்.
மதுரையில் மாநாடு: சூழல் இப்படி இருக்க நேற்று கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இன்னும் மூன்று நாட்களில் விஜயகாந்த்தின் பிறந்தநாள் வரவிருக்கும் சூழலில் மதுரையில் அந்த மாநாட்டினை நடத்தினார் விஜய். தமிழ்நாடெங்கிலுமிருந்து லட்சக்கணக்கானோர் அதில் கலந்துகொண்டார்கள். நேற்றுதான் விஜய் பேசினாலும் நேற்று முன்தினத்திலிருந்தே மாநாட்டு திடல் ஹெட்லைன்ஸாக மாறிவிட்டது.

ஏன் அப்படி?: அதாவது நேற்று முன்தினம் நூறு அடி கொடி கம்பம் ஒன்று சரிந்து விழுந்தது. அதில் தொண்டர் ஒருவருடைய கார் சேதாரமடைந்தது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட தொண்டரை தொடர்புகொண்டு விஜய்யும் பேசினார். இது ஒருபக்கம் இருக்க கூட்ட நெரிசலில் மூச்சு திணறலால் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் மாநாடு பேச்சு: மாநாட்டில் விஜய் பேச்சு பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அவர் பேசுகையில், "நம் கொள்கை எதிரி பாஜக; அரசியல் எதிரி திமுக. இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. நாம் கட்சி ஆரம்பித்துவிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழையவில்லை; ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டு வந்த பிறகுதான் கட்சியே ஆரம்பித்திருக்கிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தவெக தோன்றியிருக்கிறது. ஸ்டாலின் அங்கிள் இது ரொம்ப தவறு அங்கிள்" என்று பல விஷயங்களை பேசினார்.
கமலையும் விட்டுவைக்கவில்லையா விஜய்?: மேலும், 'நான் சினிமாவில் மார்க்கெட் போன பிறகு அரசியலுக்கு வரவில்லை. மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே வந்திருக்கிறேன்' என குறிப்பிட்டார். இந்தப் பேச்சின் மூலம் அவர் கமல்ஹாசனைத்தான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என்று கருதப்படுகிறது. அவரது இந்தப் பேச்சு குறித்து சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தார்கள்.
விஜய்க்கு செம தக் லைஃப் கொடுத்த கமல்: அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 'இதில் நான் என்ன கருத்து சொல்ல வேண்டியிருக்கிறது. அவர் எனது பெயரை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறாரா? இல்லைதானே. பிறகு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும். முகவரியே இல்லாத கடிதத்துக்கு யாராவது பதில் கொடுப்பார்களா?.. அவர் என் தம்பி" என்று கூறினார். இதனை கேட்ட ரசிகர்கள், கமலிடம் எல்லாம் விஜய்யின் பேச்சு பலிக்காது. அவர் அசால்ட்டாக தக் லைஃப் கொடுத்துவிட்டு போய்க்கொண்டே இருப்பார் என்று தவெகவினரை கிண்டல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











