For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நகைச்சுவைப் பேய்ப் படங்களுக்கு முன்னோடி - கல்யாணராமன்

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  பள்ளி சேர்வதற்கு முன்பான என் சிறுவத்தில் இரண்டு பாடல்களைத் தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தேன். ஒன்று முள்ளும் மலரும் படத்திலிருந்து 'ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலயில்லே... ஹேய்...' என்னும் பாடல். மற்றொன்று கல்யாணராமன் படத்திலிருந்து 'ஆகாங். வந்திருச்சேய்... ஆசையில் ஓடிவந்தேன்... காதல் வந்திருச்சேய்...' என்னும் பாடல். இவ்விரு பாடல்களையும் சின்னஞ்சிறுவன் பாடித்திரிந்தால் எப்படி இருக்கும் ? "ஏன் கண்ணா... உனக்கு யார் ஆண்டாலும் கவலையே இல்லையா...?" என்று நிறுத்திக் கேட்டார்கள். "ஆமா... எனக்குக் கவலையே இல்ல...." என்று சொன்னேன். முத்தூர்த் தெருவில் நான் இவ்வாறு பாடிச்சென்றதைக் கேட்ட பெட்டிக்கடைக்காரர் என் கைவழிய பச்சைத்தாள் சுற்றிய நியூட்ரின் மிட்டாய்களைத் திணித்து அனுப்பினார். அப்போது காதல் என்னும் சொல் கொஞ்சம் கெட்ட வார்த்தைதான். 'காதல் வந்திருச்சேய்...' என்று பால்குடி மறந்த சிறுவன் பாடினால் எப்படியிருக்கும் ? என்னைப் பாடவைத்துச் சிரித்தார்கள். அப்போது கல்யாணராமன் படத்தைப் பார்த்தும் இருந்தேன். மிதிவண்டியின் முன்கம்பியில் என்னை அமர வைத்து அழைத்துச் சென்று அந்தப் படத்தைக் காண்பித்திருந்தார் என் தந்தையார்.

  Kamal Haasans Kalyanaraman - A Nostalgia

  கமல்ஹாசனின் திரைமதிப்பைப் பெரிய சந்தை மதிப்புக்கு மடைமாற்றியதில் கல்யாணராமன் திரைப்படத்திற்குப் பெரும்பங்கு உண்டு. கமல்ஹாசன் முழுமையான வணிகப்படக் கலைஞர்தானா என்ற ஐயத்தை அதுவரையில் அவர் நடித்திருந்த பற்பல படங்களும் தோற்றுவித்திருந்தன. மேல்தட்டு மக்களுக்கான நாயகராகவே அவர் முன்னிறுத்தப்பட்டார். ஆனால், கல்யாணராமனுக்குப் பிறகுதான் அவர் பட்டிதொட்டியெங்கும் ஏற்கப்பட்ட முதன்மைக் கலைஞர் ஆனார்.

  இரஜினிகாந்தும் கமல்ஹாசனும் இனி சேர்ந்து நடிப்பதில்லை, தனித்தனியே நடிப்பது என்னும் முடிவினை எடுத்திருந்தார்கள். அவர்கள், அலாவுதீனும் அற்புதவிளக்கும், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்கள் அவ்விருவரும் சேர்ந்து நடித்த நிலையிலும் தோல்வியுற்றிருந்தன. அத்தோல்விகள் இருவருடைய சந்தை மதிப்பையும் ஒருசேரப் பாதித்தன. இருவர்க்குமான சுவைஞர் கூட்டத்தில் இருவேறுபட்ட இளைய தலைமுறையினரும் இருந்தனர். அன்றைக்கு அவர்கள் எடுத்து அம்முடிவு எவ்விதத்திலும் அவர்களுக்கு எதிரான விளைவுகளைத் தரவில்லை. அவ்வாறு பிரிந்து நடிக்கும் முடிவெடுத்த பிறகு வெளிவந்த படம்தான் கல்யாணராமன்.

  Kamal Haasans Kalyanaraman - A Nostalgia

  கல்யாணராமனில் கமல்ஹாசனுக்கு இரட்டைவேடம். அப்பாவியாகவும் பல் துருத்தலோடும் இருப்பவன் கல்யாணம். நன்கு கற்ற நாகரிக இளைஞன் இராமன். இருவரும் இரட்டையர்கள். குழந்தையாய் இருக்கையிலேயே தந்தையிடமும் தாயிடமுமாகப் பிரிந்தவர்கள். கல்யாணத்தின் தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்ததும் மலைத்தோட்டத்தைக் கட்டியாளும் பொறுப்பு கல்யாணத்திற்கு வருகிறது. ஏதுமறியாத அப்பாவியான கல்யாணத்திற்கு ஓட்டுநர் மகள் செண்பகத்தின்மீதுதான் ஈர்ப்பு. அரைக்கால்சட்டைச் சிறுவன் குப்பு என்பவனோடு நட்பு. கல்யாணத்தின் அறியாமையைப் பயன்படுத்தி சொத்துகளைக் கைப்பற்ற நினைப்பவன் மலைத்தோட்டச் செயலாளர். உடந்தையாக ஓட்டுநரும் ஓர் அடியாளும். அந்த வஞ்சகக்காரர்களோடு கூட்டாளியாகச் சேர்ந்துகொள்ளும் சமையற்காரர் சாமிப்பிள்ளை. அவ்வீட்டில் கல்யாணம் நம்பிப் பேசும் ஆள் சாமிப்பிள்ளைதான்.

  குளம்பி கொண்டுவரும் சாமிப்பிள்ளை கல்யாணத்தை முதன்முதலாக 'முதலாளி' என்று அழைப்பார். "நல்லா இருக்கே... இன்னொருவாட்டிச் சொல்லு..." என்று கேட்டுக் களிக்கும் அப்பாவிதான் கல்யாணம். பிரிந்து போன தாயும் அண்ணனுமாய் நடிக்க வருபவர்கள் தேங்காய் சீனிவாசனும் மனோரமாவும். எண்ணிப் பத்தே கதாபாத்திரங்களுக்குள் முழுநீளத் திரைப்படத்தைச் சுவை குன்றாமல் எடுத்திருந்தார்கள். முதற்பாதி கல்யாணம் இடம்பெறும் நகைச்சுவைக் காட்சிகள். இரண்டாம் பாதி இராமன் உள்ளே வந்து தீயவர்களைக் கலகலக்க வைக்கும் காட்சிகள். இனிய பாடல்கள். இளமையெழில் பூத்திருந்த ஸ்ரீதேவி. கைவிரல் எண்ணிக்கைக்குள் அடக்கக்கூடிய கதை மாந்தர்களைக்கொண்டு சற்றும் அலுப்பேற்படுத்தாதவாறு முழுநீளத் திரைப்படத்தை எடுத்துத் தந்துவிட்டார்கள். குடும்பத்தோடு சென்ற மக்கள் விரும்பிப் பார்த்தார்கள்.

  Kamal Haasans Kalyanaraman - A Nostalgia

  கல்யாணம் இறந்த பிறகு பேயாகவே திரைக்கதையில் வருவான். இராமன் ஒருவனின் கண்ணுக்கு மட்டும் தெரிவான். அவனுடைய உடலில் புகுந்து எதிரிகளைப் பந்தாடுவான். "நான் விரும்பியும் நிறைவேறாமல் போன செண்பகத்தை நீ திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும்" என்று கேட்டுக்கொள்வான். பேய்ப்படம்போல் திகிலாக எடுத்துச் செல்வதற்கு வாய்ப்பிருந்த கதையை நகைச்சுவைத் திக்கில் நகர்த்தியது அன்றைக்குப் புதிதாக இருந்தது. "இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..." என்ற கேள்வியே தோன்றாமல் பார்வையாளர்களைக் கதைக்குள் ஈர்த்து கேள்வியற்றவர்களாய் நிறுத்தியதுதான் கல்யாணராமனின் வெற்றிக்குக் காரணம்.

  Kamal Haasans Kalyanaraman - A Nostalgia

  கல்யாணராமனைப் பார்த்தே காஞ்சனா தொடர் படங்களை அவ்வியக்குநர் எடுக்க முனைந்ததாக பஞ்சு அருணாசலம் சொல்கிறார். அதற்கான இசைவைப் பெற அவர் தம்மைச் சந்தித்ததைப் பற்றிய குறிப்பு அவருடைய நூலில் இருக்கிறது. பிற்காலத்தில் அடுத்தடுத்த வந்த நகைச்சுவைப் பேய்ப்படங்களுக்கு என்றோ வெளியான கல்யாணராமன்தான் அடிக்கல் நாட்டியது எனலாம். சந்திரமுகியில் மீண்டும் தொடங்கப்பட்ட அந்தப் போக்கு திகிலேற்படுத்துவதை இரண்டாவதாய்க் கொண்டது. கல்யாணராமன் காட்டிய நகைச்சுவைத் தடத்தில் சென்றால் உறுதியான வெற்றி கிடைத்தது.

  கல்யாணம், இராமன் என்னும் இரண்டு கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி அதே படத்தின் தொடர்ச்சியாக 'ஜப்பானில் கல்யாணராமன்' என்னும் திரைப்படமும் வந்தது. அந்தப் படம் கல்யாணராமன் பெற்ற பெருவெற்றியைப் பெறவில்லை. முன்பே வெற்றி பெற்ற சிறப்பான கதாபாத்திரங்களை மீண்டும் எடுத்துக் கையாளும்போது திரைக்கதை வலுவாக அமைய வேண்டும். தான் ஒரு பத்திரிகை நடத்த அச்சுக்கருவி வாங்க வெளிநாட்டுக்குச் செல்வதாகவும் அதை முறியடிக்க நினைக்கும் எதிரி அங்கே வந்து இடையூறு தருவதாகவும் எடுக்கப்பட்ட அப்படம் திரைக்கதை வலு போதாமல் தோல்வியடைந்தது.

  Kamal Haasans Kalyanaraman - A Nostalgia

  கல்யாணராமனில் குறிப்பிடத்தக்க காட்சி ஒன்று இருக்கிறது. தேங்காய் சீனிவாசனும் மனோரமாவும் நாடக நடிகர்கள். 'கிட்டு - ரங்கமணி' என்ற பெயரில் சென்னையின் மக்கள்திரள் மிகுந்த பகுதிகளில் 'சென்னைத் தமிழிலேயே' பேசி நடிக்கும் நாடகங்களை நடத்துவார்கள். 'மனோகரா' நாடகத்தை சென்னைத் தமிழ் உரையாடலில் நடித்துக் காண்பிப்பார்கள். "பொறுக்கிப் பையா... புருஷோத்தமா... நைனா... டேய்..." என்று தந்தையை விளிக்கும் மனோகரனையும் "மவனே மனோகரா... நான் பெத்த மாணிக்கமே.... இன்னா வார்த்தைடா சொல்லிக்கினே நீ..." என்னும் தாயாரையும் இன்றைக்கும் பார்த்துச் சிரிக்கலாம்.

  English summary
  Poet Magudeswaran's nostalgia on Kamal Haasan superhit comedy horror movie Kalyanaraman.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X