தென்காசியில் "பாபநாசம்"...!
தென்காசி: கமல்ஹாசன் நடிக்கும் மலையாள திரிஷ்யம் படத்தின் ரீமேக்கான பாபநாசம் படத்தின் ஷூட்டிங் தென்காசியில் தொடங்கியுள்ளது.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கமல்ஹாசனுடன், கெளதமி இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார்.
இப் படத்தின் படப்பிடிப்பு தமிழக கேரளா எல்லை பகுதியும் அடர்ந்த வனப்பகுதியுமான மேக்கரை-அச்சன் கோவில் சாலையில் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது.

மேக்கரை - கொடிக்குறிச்சி
மேக்கரை, கொடிக்குறிச்சி, இலத்தூர், அடவிநைனார் கோவில் நீர்தேக்கம், தென்காசி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்டப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

செட்டியார் பங்களாவில்
இரவில் பழைய குற்றாலம் செல்லும் வழியில் உள்ள செட்டியார் பங்களாவில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

வேட்டி சட்டையில் கமல்
நேற்று தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வேஷ்டி, சட்டையில் வித்தியாசமான கெட்டப்பில் கமல்ஹாசனும், கவுதமியும் பேருந்துக்காக காத்திருப்பது போலவும், பேருந்தில் பயணம் செய்வது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டன. ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்த ஒரு பொதுஜனம் உடனடியாக தனது செல்போனில் எடுத்து நண்பர்களுக்கு அர்ப்பணித்து விட்டார்.

ரூ. 10 லட்சம் கொடுத்து
முன்னதாக கடந்த வெள்ளியன்றுதான் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு தடை விதித்தது. ஷூட்டிங்கின் துவக்க வேலைகள் ஆரம்பமாகியிருந்தால், 10 லட்சம் ரூபாய் பணத்தைக் கட்டிவிட்டு ஷூட்டிங்கை நடத்தலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி நீதிமன்றத்தில் பணத்தை செலுத்துவிட்டு ஷூட்டிங் நடத்த அனுமதி பெற்றுவிட்டார்களாம் தயாரிப்பாளர்கள். மேலும் தென்காசியில்இருந்து எர்ணாகுளம் 5 மணி நேர பயணம் என்பதால் இங்கு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

கமல் - கெளதமி
இந்தப் படத்தில் கமல்ஹாசனும், கவுதமியும் மிக நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு ஜோடியாக நடிக்கிறார்கள். போலீஸ் ஐ.ஜி.யாக மலையாளத்தில் நடித்த ஆஷா சரத் நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக கலாபவன் மணி நடிக்கிறார். கமலின் மகள்களாக நிவேதா தாமஸும், எஸ்தரும் நடிக்கிறார்களாம். மலையாள திரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீது ஜோஸப்பே இந்தப் படத்தையும் இயக்குகிறார்.

தென்காசியில் 2வது கமல் படம்
புன்னகை மன்னன் படத்திற்குப் பின் தென்காசியில் எடுக்கப்படும் கமலின் இரண்டாவது படம் இந்தப்படம்.


Click it and Unblock the Notifications











