சிவனே சிரித்து மகிழத்தான்.. சீக்கிரமே கொண்டு சென்று விட்டானோ? மயில்சாமி மறைவு.. பிரபலங்கள் இரங்கல்!
சென்னை : திரைத்துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த மயில்சாமியின் மறைவுக்கு ஒட்டுமொத்த திரைத்துறையும் திரண்டு வந்து கனத்த இதயத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1984ம் ஆண்டு தாவணிக் கனவுகள் படத்தில் கூட்டத்தில் ஒருவராக யாருக்கும் தெரியாமல் ஓரத்தில் நின்ற மயில்சாமி, தன்னுடைய தனித்திறமையான நடிப்பால், வாரி கொடுக்கும் வள்ளல் மனதால் இன்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளார்.
மயில்சாமியின் இறுதிச்சடங்கு நாளை காலை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

பிரபலங்கள் அஞ்சலி
சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் வீட்டில் அவரது உடல், திரை பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மயில்சாமியின் உடலுக்கு எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, டிரம்ஸ் சிவமணி அஞ்சலி நடிகை கோவை சரளா, நடிகர்கள் அப்பு குட்டி, முத்துக்காளை, மானோபாலா, நடிகர் செந்தில், ராதாரவி, பாண்டியராஜன், ஜெயராம், செந்தில், போண்டா மணி உள்ளிட்ட நண்பர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நைட்டுக்கூட பேசினேனே
மயில்சாமி அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் செந்தில் செய்தியாளர்களிடம் பேசினார். மயில்சாமி அவர்கள் நல்ல நடிகர், நடிகர் மட்டுமில்லாமல் எதார்த்தமான மனிதர், அவர் அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர் நைட்டுக்கூட அவரிடம் பேசினேன் என தழுதழுத்த குரலில் அழுது பேச முடியாமல் கண்கலங்கினார்.

உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார்
நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கல் பதிவில், நகைச்சுவை நடிப்பில் தனக்கென்று ஒரு பாணியை முன்னிறுத்தி வெற்றி கண்டவர் நண்பர் மயில்சாமி. உதவும் சிந்தையால் பலராலும் நினைக்கப்படுவார். அன்பு நண்பருக்கென் அஞ்சலி #Mayilsamy என பதிவிட்டுள்ளார்.

புண்ணியாத்மா
நடிகை கஸ்தூரி தனது இரங்கல் பதிவில் சிவராத்திரி இரவெல்லாம் இறைவனை வேண்டிய வேளையிலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்... புண்ணியாத்மா. அவர் மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

சீக்கிரமே கொண்டு சென்று விட்டானோ?
காமெடி நடிகரான சாம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், அற்புதமான மிமிக்ரி திறமையால் அகில உலகமும் சுற்றி வந்தவர், அளவில்லாத நகைச்சுவையை சினிமாவில் அள்ளித்தந்தவர். அடுத்தவர்க்கு அன்னமிட்டு அழகு பார்ப்பவர், சிரிக்க வைக்கும் சித்தனே, சிவனுடைய பக்தனே, சிவனே சிரித்து மகிழத்தான் சீக்கிரமே கொண்டு சென்று விட்டானோ? பிரார்த்திக்கிறேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும்
நடிகை சாக்ஷி அகர்வால் அவருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். உங்களின் நகைச்சுவை உணர்வும் நேர்மறை மனப்பான்மையும் ஷூட்டிங் ஸ்பாட் முழுவதும் சிரிப்பாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்திருக்கும்.. RIP மயில்சாமி சார். குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











