சாமானியரும் சரித்திர நாயகனாக முடியும் என நிரூபித்த வி.பி. மேனனின் நாடகத்தை வெளியிட்ட கமல்ஹாசன்!
சென்னை: சாதாரண கிளெர்காக இருந்து மவுண்ட்பேட்டனுக்கே அறிவுரை வழங்கும் அளவுக்கு சரித்திர நாயகனாக உயர்ந்த வி.பி. மேனனின் வாழ்க்கை வரலாறு நாடகத்தை யூடியூபில் உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டு இருக்கிறார்.
Vriksh the Theater எனும் பெயரில் புதிதாக தொடங்கப்பட்ட யூடியூப் சேனலை அறிமுகப்படுத்தும் வகையில் சர்தார் வல்லபாய் பட்டேலுடன் இந்திய தேசத்தின்எல்லைகளை வகுக்க உதவியாக இருந்த வி.பி. மேனனின் நாடகம் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கேரளா கிளப் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த நாடகத்தை இயக்குநர் அஜித் ஜி மணியன் இயக்கி இருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி கேரளா சங்கீத நாடக அகாடமி நடத்திய தேசிய அளவிலான போட்டியில் சிறப்பு ஜூரி விருதை தட்டிச் சென்றது இந்த நாடகம்.
சுமார் 2 மணி நேரம் 37 நிமிடம் ஓடக் கூடிய இந்த சரித்திரமெழுதிய ஹிரிதயங்கள் எனும் நாடகத்தை டிஜிட்டல் வடிவில் ரசிகர்களுக்கு கொண்டு சேர்க்க தற்போது யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்கை வி.பி. மேனன் ஆற்றி உள்ளார்.

வெள்ளையர்களின் ஆட்சியில் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல் சாதாரண கிளெர்க்காக பணியாற்றி வந்த வி.பி. மேனன் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் கடைசி மூன்று வைஸ்ராய்களுக்கு ஆலோசகராகும் அளவுக்கு தனது முயற்சியாலும் புத்தி கூர்மையாலும் உயர்ந்தார்.
அதுமட்டுமின்றி 56 மாகாணங்களாக பிரிந்து கிடந்த சுதந்திர இந்தியாவை மொழி வாரியாக மாநிலங்களாக பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு பெரும் உறுதுணையாக இவர் இருந்துள்ளார்.
இந்திய சுதந்திர போராட்டத்திற்காக பாடுபட்ட பல தியாகிகளின் வரலாறுகள் இன்னமும் சொல்லப்படாமலே இருக்கிறது.
அவர்களின் ஒருவரான வி.பி. மேனனின் வாழ்க்கை வரலாற்றை வேதாளம் ஒன்று விக்ரமாதித்யன் முதுகில் ஏறிக் கொண்டு கதை சொல்வது போல உருவாகி உள்ளும் இந்த நாடகத்தை சுதந்திர தினத்தன்று ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்வதாக நடிகர் கமல்ஹாசன் தற்போது ட்வீட் போட்டு அதன் யூடியூப் லிங்கையும் ஷேர் செய்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











