Thug Life Box Office: ஏற்றமா.. ஏமாற்றமா.. தக் லைஃப் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விபரம் இதோ!
சென்னை: ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உச்சகட்ட ஆதரவுக்கு இடையில் வெளியான படம் தக் லைஃப். ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், பக்ஸ், ஜூஜு ஜார்ஜ், வடிவுக்கரசி, வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், சேத்தன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து இந்த படம் வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவான இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வெளியான இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் ஏற்பட்டது. படத்தின் முதல் அறிவிப்பில் இருந்து ரசிகர்கள் ஒவ்வொன்றையும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வந்தார்கள். படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என அனைத்துமே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.
இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது கமல்ஹாசன், " தமிழில் இருந்துதான் கன்னடம் வந்தது" என்று கூறினார். இவரது இந்த கருத்துக்கு கர்நாடக அரசியல்வாதிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால், படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது பலரும் அறிந்ததே. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் படத்தை வெளியிடுவோம் என்று நீதிமன்றமே மிரட்டிப் பார்த்தது. ஆனால், கமல்ஹாசனோ தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்கலாம், தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்கு, எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும், மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் படம் கர்நாடகாவில் ரிலீஸ் செய்யப்படவில்லை.

ரசிகர்கள் விமர்சனம்: படம் நேற்று கர்நாடகா தவிர உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. படம் பார்த்த பெரும்பான்மையான ரசிகர்கள் கூறிய விஷயம் என்றால், படம் மிகவும் சுமாராக உள்ளது. இப்படி ஒரு திரைக்கதையில் சுவாரஸ்யமில்லாத படத்தை மணிரத்னத்திடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த படத்திற்கு இவ்வளவு பில்டப் கொடுத்தார்கள் என்றெல்லாம் விளாசி வருகிறார்கள். மேலும் படத்தில் உருப்படியாக உள்ள விஷயம் என்றால் அது பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு மட்டும் தான். மற்றபடி படத்தில் டேக் அவே என்று எதுவும் இல்லை என்று கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
அதர பழசான கதை: படத்தின் கதை, பழிவாங்கல். இது போல ஏற்கனவே தமிழில் நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகிவிட்டது. படத்தின் திரைக்கதையில் சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. 2 மணி நேரம் 45 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தில் உருப்படியாக மனதில் நிற்கும் காட்சிகள் என எதுவும் இல்லை. படம் டெக்னிக்கலாக ஸ்டாராங்காக உள்ளது, ஆனால் திரைக்கதையில் கோட்டை விட்டு விட்டது என்று கூறி வருகிறார்கள்.

வசூல் விபரம்: படம் முதல் நாளில் கர்நாடகா தவிர தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் சேர்த்து இந்தியா முழுவதும் ரூபாய் 17 கோடிகள் வசூல் செய்துள்ளது என சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இது முன்கூட்டியே எடுக்கப்பட்ட தோராயக் கணக்குதான் எனவும் அந்த வலைதளம் தெரிவித்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் முதல் நாளே மிகக் குறைவாக வசூல் செய்துள்ளது என்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் படம் எப்படியும் சுமார் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











