Ponniyin selvan 2 - பொன்னியின் செல்வன் 2 - மாற்று கருத்துகள் இருந்தாலும் ஆதரவு.. கமல் ஹாசன் கருத்து
சென்னை: Kamal Haasan on Ponniyin selvan 2(பொன்னியின் செல்வன் குறித்து கமல் ஹாசன்) மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்த கமல் ஹாசன் அதுகுறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலுக்கென்று தலைமுறைகள் கடந்தும் பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்கும் முயற்சியில் இறங்கினார் மணிரத்னம். அவருக்கு லைகா துணை நிற்க படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. இதனால் படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு உலக தமிழர்கள் அனைவரிடமும் எழுந்தது.

பொன்னியின் செல்வன் 1: ஐந்து பாகங்கள் கொண்ட நாவலை இரண்டு பாகங்களாக சுருக்கி திரைப்படம் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி முதல் பாகமானது கடந்த வருடம் வெளியாகி 500 கோடி ரூபாய் வசூலித்தது. கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அருண்மொழி சோழன் கடலுக்குள் விழுவது போலவும், அவரை ஊமை ராணி காப்பாற்றுவது போலவும் முதல் பாகம் முடிவடைந்திருந்தது. படக்குழு எதிர்பார்த்த வெற்றியை முதல் பாகம் பெற்றது.
பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்: முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி படமானது கடந்த 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படை எடுத்தனர்.
விமர்சனத்தை சந்தித்த பொன்னியின் செல்வன்: படத்தை பார்த்த ரசிகர்கள் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துக்கு ஓரளவு டீசண்ட்டான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர். அதேசமயம் முதல் பாகத்தில் இருந்த சின்ன சின்ன குறைகளை மணிரத்னம் இதில் போக்கியிருந்தாலும் படத்தில் ஏதோ ஒன்று மிஸ் ஆவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி மணிரத்னம் தனது இஷ்டத்துக்கு வரலாறை மாற்றி வைத்திருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.

படம் பார்த்த கமல்: படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. நடிகர் கமல் ஹாசனும் படத்தை பார்த்துவிட்டு ஏகத்துக்கும் புகழ்ந்திருக்கிறார். அவர் மணிரத்னம் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத்துடன் பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்தார்.
சினிமாவின் ரசிகன்: படத்தை பார்த்துவிட்டு பேசிய கமல், "நான் ஒரு சினிமாவின் ரசிகன். அதுதான் எனது முதல் அடையாளம். சினிமா கலைஞன் என்பது என் இரண்டாவது அடையாளம். எனது முதல் விருப்பம், ஆசை எல்லாம் சினிமாவை பார்க்க வேண்டும். அது நல்ல சினிமாவாக இருக்க வேண்டும். அப்படி ஒரு சினிமாவாக அமைந்திருக்கிறது இந்த பொன்னியின் செல்வன். இதை ஒரு படமாக நான் பார்க்கிறேன். மணிரத்னம் இதனை சிறப்பாக செய்திருக்கிறார்.

மாற்று கருத்துகள் உண்டு: எல்லா படங்களுக்கும் மாற்றுக் கருத்துகள் இருக்கும். அது இந்தப் படத்தில் இருந்திருந்தாலும்கூட மக்கள் இதை பெரிதாக ஆதரிக்கிறார்கள் என்பதை செய்திகள் மூலம் அறிகிறேன். தமிழ் சினிமாவின் பெருமையும் தமிழரின் பெருமையையும் போற்றும் இத்தகைய படத்தை எடுப்பதற்கு தனி துணிச்சல் வேண்டும். அதனை எடுத்திருக்கும் முக்கியமான வீரர் மணிரத்னம். அவரை பாராட்ட வேண்டும். நல்லதொரு பொற்காலம் தொடங்கியிருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











