பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய ஷங்கருக்கு நன்றி சொன்ன கமல்.. இந்தியன் 2 அப்டேட் கேட்கும் ரசிகர்கள்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
நடிகர்கள், இயக்குநர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இயக்குநர் ஷங்கர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள நிலையில் அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் நம்மவர்.

மகா கலைஞனுக்கு பிறந்தநாள்
60 ஆண்டுகளுக்கும் மேல் இந்திய சினிமாவில் மிகப்பெரிய சரித்திர நாயகன் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். குழந்தை நட்சத்திரம், ஹீரோ, இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், அற்புதமாக நடனம் ஆடக் கூடியவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் தன்மைகளை கொண்ட மகா கலைஞனை மக்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்தி வருகின்றனர்.

போற்றிப் பாடும் ரசிகர்கள்
கடவுள் நம்பிக்கையே இல்லாத கமல்ஹாசனை ஆண்டவர் என்றே அன்போடு அவரது ரசிகர்கள் போற்றிப் பாடி வருகின்றனர். பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு சட்டையை அணிந்து கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேக் வெட்டி கொண்டாடிய கமல் சாரின் புரமோவை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர்ஸ்டார்கள் வாழ்த்து
டோலிவுட் சூப்பர்ஸ்டாரான மகேஷ் பாபு, மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால் உள்ளிட்ட பிற மாநில சினிமா பிரபலங்கள் பலரும் உலக நாயகனின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

இயக்குநர்கள் வாழ்த்து
நடிகர்கள், அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி இயக்குநர்களும் உலக நாயகனை உளமாற வாழ்த்தி உள்ளனர். பாரதிராஜா மற்றும் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பிரபல இயக்குநர்கள் கமல் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி தங்களின் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

360 டிகிரி கிராஃப்ட்மேன்ஷிப்
இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், சினிமாவில் 360°x360° கிராஃப்ட்மேன்ஷிப் கொண்ட தலை சிறந்த நடிகர் கமல்ஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம்முடைய சினிமாவின் பொக்கிஷம் அவர் எனக் குறிப்பிட்டு வாழ்த்தி உள்ளார்.

நன்றி சகோதரரே
இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள் வாழ்த்துக்கு கமல் சார் "அன்பிற்கு நன்றி சகோதரரே" என பதில் ட்வீட் போட்டு நன்றி கூறியுள்ளார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் தேசிய விருதை வென்று மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. மீண்டும் இருவரும் இணைந்த இந்தியன் 2 திரைப்படம் பல பிரச்சனைகள் காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட்டு வழக்கும் நடைபெற்று வருகிறது.

இந்தியன் 2 வரணும் சார்
இயக்குநர் ஷங்கர் வாழ்த்துக்கு கமல் நன்றி சொன்ன நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை ரசிகர்கள் நாங்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் கமல் சார். சீக்கிரமே அந்த படம் மீண்டும் ஆரம்பிக்கும் அதிகாரப்பூர்வ அப்டேட்டை கொடுங்க.. கண்டிப்பா விரைவில் இந்தியன் 2 திரைக்கு வரணும் சார் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











