அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ.. கமல் ஹாசன் எடுத்துக்கொண்ட ரகளையான ஃபோட்டோ
சென்னை: கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பிஸியாக இருக்கும் கமல் ஹாசனை எப்போதும் ரோல் மாடலாக நினைப்பவர்கள் சினிமாவில் அதிகம். தற்கால பிஸி இயக்குநரான லோகேஷ் கனகராஜும் கமலின் வெறித்தனமான ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. சூழல் இப்படி இருக்க இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவை கௌரவப்படுத்தும் விதமாக அபூர்வ சிங்கீதம் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறார்.
கமல் ஹாசன் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இந்திய சினிமாவில் யாராலும் மறுக்க முடியாதது. சிறு வயதிலிருந்தே சினிமாவில் இருக்கும் அவர் இதுவரை 233 படங்களில் நடித்திருக்கிறார். சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்ததாலோ என்னவோ அவருக்கு சினிமாவில் தெரியாத ஜானரே இல்லை. குழந்தை நட்சத்திரம், உதவி நடன அமைப்பாளர், நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என எந்த கிரவுண்டில் இறங்கினாலும் அதில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுபவர் அவர்.

சினிமா பல்கலைக்கழகம்: கமல் ஹாசன் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்துபவர். ஏதேனும் ஒரு புதிய தொழில்நுட்பமோ இல்லை புதிய கருவியோ வந்தால் அதனை தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்துவதும் அவரே. அதனால்தான் அவரை சினிமாவில் நடமாடும் பல்கலைக்கழகம் என்கிறார்கள். மேலும் தற்கால இயக்குநர்கள், நடிகர்கள் கமல் ஹாசனின் ரசிகர்களாகவும் இருக்கிறார்கள்.
மஞ்சும்மல் பாய்ஸ்: அதற்கு சமீபத்திய உதாரணம்தான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். அப்படத்தின் இயக்குநர் சிதம்பரம் பொடுவல் கமல் ஹாசனின் தீவிரமான ரசிகர். 1991ஆம் ஆண்டு குணா படம் எடுக்கப்பட்ட குகையை மையமாக வைத்து மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை உருவாக்கியிருந்தார். அந்தப் படம் கேரளாவைத் தாண்டி தமிழ்நாட்டிலும் வசூல் மழை பொழிந்துவருகிறது. அதற்கு காரணம் கமல் ஹாசனும், குணாவும், அதில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலனும் பாடல்தான்.
கண்மணி அன்போடு காதலன்: வழக்கமான மெலடியாக இல்லாமல் கமல் ஹாசன் ஐடியா கொடுக்க ஒரு கடிதம் எழுதுவது போல் அந்தப் பாடலை உருவாக்கியிருந்தார்கள். அந்தப் பாடல் இப்போதுவரை ஃபேமஸ். மஞ்சும்மல் பாய்ஸில்கூட அந்தப் பாடல் வரும்போது திரையரங்கில் இருந்த ஒட்டுமொத்த பேரும் கைத்தட்டி ஆர்ப்பரித்தார்கள். அந்த அளவுக்கு பாடல் இன்றுவரை கனெக்ட் ஆகியிருக்கிறது. இப்படி பல புதுமைகளை அப்போதே புகுத்தி இன்றுவரை தனி ஆளுமையாக திகழ்ந்துகொண்டிருக்கிறார் கமல் ஹாசன்.
ரகளையான புகைப்படம்: கமல் ஹாசன் இப்போது தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். இந்தியன் 2 பட பணிகளும் முடியும் தருவாயில் இருக்கிறது. அடுத்ததாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கும் அவர்; இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவை கௌரவப்படுத்தும் விதமாக அபூர்வ சிங்கீதம் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறார்.
அதில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் கலந்துகொள்கின்றனர். அந்தவகையில் டான்ஸ் மாஸ்டர் சுந்தரமும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அபூர்வ சகோதரர்கள் படத்தில் இடம்பெற்ற அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ பாடலின் ஸ்டெப்பை போட்டபடி புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அண்ணாத்தை ஆடுறார்"அபூர்வ சிங்கீதம் , நிகழ்ச்சிக்கு வந்திருந்த திரு. சுந்திரம் மாஸ்டருடன் ஒத்தைகாலில் நின்று ஒரு ஃபோட்டோ எடுத்துக்கொண்டேன் என குறிப்பிட்டிருக்கிறார். அபூர்வ சகோதரர்கள் படத்தை இயக்கியது சிங்கீதம் சீனிவாசராவ் என்பதும்; அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்தது சுந்தரம் மாஸ்டர் என்பதும் நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











