அட தக் லைஃப் படத்தில் ஆண்டவர் செய்யப்போகும் சம்பவம் இதுவா?.. ஒன்னுனாலே அள்ளும் மூனு வேறயா
சென்னை: விக்ரம் படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி கொடுத்தார் கமல் ஹாசன். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதனையடுத்து உற்சாகமடைந்த அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பதும், படங்களை தயாரிப்பதும் என பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் நடித்துவருகிறார். ஷங்கர் இயக்கத்தில் நடித்திருக்கும் இந்தியன் 2 படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் தக் லைஃப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
கமல் ஹாசன் கடைசியாக விக்ரம் படத்தில் நடித்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படத்தின் மூலம் தரமான வெற்றியை பதிவு செய்தார். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் படம் ஆகியவை தற்போது கமலின் லைன் அப்பாக இருக்கிறது. இடையே ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் அவர் நடிக்க கமிட்டானார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது. அதற்கு பதிலாக சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

கமல் - மணிரத்னம்: கமல் ஹாசனும் மணிரத்னத்தும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை சிறந்த அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது. தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் இணைவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இப்படத்தை ராஜ்கமல் நிறுவனம், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
டைட்டில் இன்ட்ரோ: இந்த சூழலில் படத்தின் பூஜையும், டீசர் ஷூட்டிங்கும் கடந்த வருடம் நடந்தது. அதில் கமல், மணிரத்னம் மற்றும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து கமல் ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் நவம்பர் 6ஆம் தேதி படத்தின் டைட்டில் இன்ட்ரோ வீடியோ வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஷூட்டிங் அப்டேட்: இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் தொடங்கி செர்பியாவில் விறுவிறுப்பாக நடந்தது.
மக்களவைத் தேர்தல்: சூழல் இப்படி இருக்க மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதன் காரணமாக அரசியல் களத்தில் பிஸியாகியிருக்கிறார் கமல் ஹாசன். அவர் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அரசியலில் தற்போது அவர் கவனம் செலுத்த இருப்பதால் தக் லைஃப் படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் மற்றவர்களை வைத்து மீதமிருக்கும் போர்ஷன்களை முடிக்கு திட்டத்திலும் மணிரத்னம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மூன்று வேடங்கள்: இந்நிலையில் தக் லைஃப் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தில் அவர் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படத்தின் அடுத்த அப்டேட்டிலோ அல்லது அடுத்த போஸ்டரிலோ கண்டிப்பாக இடம்பெறும் என்று படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் கமல் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











