அவர் ஒரு ஹாலிவுட் படம் பண்ணனும்.. ஏ.ஆர். ரஹ்மானுக்கு வந்த ஆசை.. நிறைவேற்றுவாரா கமல்?
சென்னை: கமல்ஹாசன் ஒரு ஹாலிவுட் படம் பண்ணனும் என 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே சொல்லியிருந்தேன் என்றும் இப்போது கூட அவர் ஹாலிவுட் படம் பண்ணா நல்லா இருக்கும் என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பது ரசிகர்களையும் எதிர்பார்க்கத் தூண்டியிருக்கிறது.
உலக நாயகன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் தமிழ்நாட்டிலேயே தங்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஓகே என்றாலும், அது அவருக்குள் இருக்கும் மிகப்பெரிய கலைஞனுக்கு ஓகே இல்லை என்றே சொல்லுவேன் என ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவில் இருவரும் ஓபன்ஹெய்மர் படத்தை பார்த்தும் ஹாலிவுட்டில் நிகழ்ச்சிகளுக்கு இணைந்து சென்றும் இருந்த போது ஏகப்பட்ட விஷயங்களை கமல் தன்னிடம் சொல்லியதாக ரஹ்மான் வெளிப்படையாக பேசியுள்ளார்.
உலக நாயகன் பட்டம்: ஹாலிவுட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து தொழில்நுட்பங்களையும் பல ஆண்டுகளாக தனது படங்கள் மூலம் தமிழ் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் அறிமுகப்படுத்தி வரும் கமல்ஹாசனை உலக நாயகன் என்றே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நடிப்பு, திரைக்கதை, மேக்கிங் என அனைத்துக்குமே கலை ரீதியாக வெளிநாடுகளில் கொடுக்கும் முக்கியத்துவத்தை தொடர்ந்து தனது படங்களில் கொடுத்து வருகிறார் கமல்ஹாசன். ஆரம்ப காலத்தில் தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், இந்தி என கலக்கி வந்த கமல்ஹாசன் ஒரு கட்டத்துக்கு மேல் தமிழ் சினிமாவிலேயே தங்கி விட்ட நிலையில், தற்போது பிரபாஸ் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவுக்கு பல ஆண்டுகள் கழித்து சென்றிருக்கிறார்.

கல்கியில் கமல்: இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, பசுபதி நடிப்பில் உருவாகி வரும் கல்கி 2898 ஏடி படத்தில் முக்கிய வேடத்தில் கமல் நடித்து வருகிறார்.
சமீபத்தில், அமெரிக்காவின் காமிக் கான் நிகழ்ச்சியில் அந்த படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொண்டதும் அதன் பின்னர் ஏ.ஆர். ரஹ்மான் உடன் ஓபன்ஹெய்மர் படம் பார்த்த நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளன.
கமல் ஹாலிவுட் படம் பண்ணனும்: சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கமல்ஹாசன் சாருக்கு இருக்கும் திறமைக்கும் அறிவுக்கும் அவர் ஒரு ஹாலிவுட் படம் பண்ணனும், 20 வருஷத்துக்கு முன்னாடியே இதை நான் அவரிடம் சொல்லியிருக்கேன். இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல, அவருடைய கலை தாகத்தை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்த ஒரு ஹாலிவுட் படம் பண்ணா நல்லா இருக்கும் என ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











