"சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர".. காதலர் தினம் கொண்டாடுவோம்.. கமல் ட்வீட்!
சென்னை: உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் காதலர் தின வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் காதலர் தினத்தை கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
"மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலே அல்ல.. அதையும் தாண்டி புனிதமானது" என குணா படத்திலும், புன்னகை மன்னன் படத்தில் இடம்பெற்ற "என்ன சத்தம் இந்த நேரம்" பாடலில் கமலின் காதல் லீலைகளும், தேவதாசாகவே வாழ்வே மாயம் படத்தில் காதலுக்காக உயிரை கொடுக்கும் கதாபாத்திரம் என கமல்ஹாசன் நடிக்காத காதல் கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எண்ணற்ற காதல் படங்களில் நடித்துள்ளார்.
காதலிக்கு முத்தம் தருவதில் தொடங்கி, ரொமான்ஸ் காட்சிகளில் கமலை அடித்துக் கொள்ள ஆளே தமிழ் சினிமாவில் இல்லை என சொல்லும் அளவுக்கு காதல் நாயகனாக வலம் வரும் கமல் காதலர் தினத்துக்கு வாழ்த்து சொல்லி இருப்பது இளம் காதலர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

காதலர் தினம்
உலக காதலர்கள் கொண்டாடும் காதல் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே காதலர் தின கொண்டாட்டங்களை இளைஞர்கள் அதிகளவில் கொண்டாடி வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் ரசிகர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கமல் வாழ்த்து
"சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்." என நடிகர் கமல்ஹாசன் ட்வீட் போட்டு காதலர் தின வாழ்த்துகளை கூறியுள்ளார்.

ரொமான்டிக் ஹீரோ
தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக கமல்ஹாசன் நீண்ட காலமாக இருந்து வருகிறார். சலங்கை ஒலி, வாழ்வே மாயம், புன்னகை மன்னன், மூன்றாம் பிறை, காதலா காதலா, சிங்கார வேலன், குணா, 16 வயதினிலே என பல படங்களில் வித்தியாசமான காதல் கதாபாத்திரங்களிலும் ரொமான்டிக் காட்சிகளிலும் கமல் நடித்து அசத்தி இருப்பார்.

காதல் பாடல்கள்
"காலம் காலமாக வாழுகின்ற காதலுக்கு நாங்கள் அர்ப்பணம்", "காதலா காதலா காதலால் தவிக்கிறேன்" "உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை", "காடு திறந்து கிடக்கின்றதே" "கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே" என ஏகப்பட்ட காதல் பாடல்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்து திகட்டாத காதல் அனுபவங்களை பல ஆண்டுகளாக கொடுத்து வரும் கமல்ஹாசனின் இந்த காதலர் தின வாழ்த்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











