KH233 movie: அடுத்த ஆண்டிற்கு தள்ளிப்போன KH233 படத்தின் சூட்டிங்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்தப் படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது KH233 படத்திற்காக இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

ஆனால் இந்தியன் 2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தது. இந்தப் படத்தின் அதிகப்படியான வெற்றி கொடுத்த சந்தோஷத்தில் அடுத்தடுத்து தயாரிப்பு, நடிப்பு என படங்களின் அறிவிப்பை மேற்கொண்டு வருகிறார் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ஷங்கர். படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளது.
அடுத்தடுத்த பாகங்கள்: இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், திருப்பதி உள்ளிட்ட இடங்களிலும் வெளிநாடுகளிலும் நடந்து முடிந்துள்ளது. கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங், விபத்து, கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முடங்கியது. இந்நிலையில் கடந்த ஆண்டில் மீண்டும் தூசி தட்டப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் 6 மணிநேரத்திற்கு அதிகமாக இருப்பதாகவும் அதனால் படத்தின் அடுத்த பாகத்தை வெளியிடலாம் என்றும் இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தற்போது திட்டமிட்டுள்ளனர்.
இந்தியன் 3 படத்தை உறுதி செய்த கமல்: இந்தியன் 3 படம் குறித்து சமீபத்தில் நடைபெற்ற தன்னுடைய பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசனும் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் வெளியாகும்போது அது அரசியல் மேடையாக மாறும் என்று அவர் கூறியிருந்தார். இதனிடையே இந்தியன் 3 படத்தின் எஞ்சிய காட்சிகளுக்காக 40 நாட்கள் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தள்ளிப்போன KH233 படத்தின் சூட்டிங்: இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக தன்னுடைய தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஹெச் வினோத் உருவாகவிருந்த KH233 படத்தின் சூட்டிங்கில் கமல் இணையவுள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்கும் சூட்டிங் துவங்கவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது இந்தியன் 3 படத்தின் சூட்டிங்கில் கமல் கவனம் செலுத்தவுள்ளதால் ஹெச் வினோத் -கமல் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டிற்கு தள்ளிப் போயுள்ளது.
அடுத்த ஆண்டில் KH233 பட சூட்டிங்: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில்தான் ஹெச் வினோத் இயக்கத்தில் கமல் இணையவுள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. குறுகிய கால தயாரிப்பாக நடைபெறவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக தேர்தல் பிரசாரத்தில் கமல் இணைவார் என்றும் தேர்தலையடுத்தே மணிரத்னம் இயக்கத்தில் KH234 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கமல் பிறந்தநாளில் ஹெச் வினோத் இயக்கத்தில் KH233 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சூட்டிங் தள்ளிப்போயுள்ளது.


Click it and Unblock the Notifications











