போடு வெடிய.. பொங்கலுக்கு வரும் ரஜினி கமல் கூட்டணி.. இறங்கி வேலை பார்க்கும் சுந்தர் சி
சென்னை: தமிழ் சினிமாவில் 70களில் தொடங்கி 2000 வரை ரஜினி மற்றும் கமலுக்கு இடையிலான தொழில் போட்டி என்பது உச்சகட்டத்தில் இருந்தது. கமலை வைத்து ஒரு இயக்குநர் இயக்கி ஒரு ஹிட் கொடுத்து விட்டால், உடனே அந்த இயக்குநரை அழைத்து அவருடன் இணைந்து மிகப்பெரிய ஹிட்டுக்கு அடி போட்டு அதில் வெற்றியும் கண்டு விட்டார் ரஜினி. அதேபோலத்தான் கமலும் இருந்தார். அதன் பின்னர் இந்த ஜெனரேஷன் இயக்குநர்களில் கமலை இயக்கிய ஒரு இயக்குநர் ரஜினியை இயக்கியுள்ளார் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான்.
ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையிலான தொழில் போட்டியை விட, இருவரது தனிப்பட்ட நலன் குறித்தும் இருவரும் அதிக அக்கறை காட்டத் தொடங்கினர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும், அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், அந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளதாகவும் பேச்சு கோலிவுட் முழுவதும் உலா வந்தது.

அதேபோல் இவர்களை இயக்குவதில் இயக்குநர் சுந்தர் சி., பெயரும் அடிபட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வெட்டு குத்து ரத்தம் என்று ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறார். கமல்ஹாசனும் கிட்டத்தட்ட அப்படியான கதையம்சம் கொண்ட கதைகளை தேர்வு செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டார். இப்படி இருக்கும்போது, இவர்கள் இருவரும் சுந்தர் சி., இயக்கத்தில் நடிக்கிறார்கள் என்றால் அது அக்மார்க் கமர்ஷியல் படமாகத்தான் உருவாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம் என்ற பேச்சுக்களும் அடிபட்டது.
தலைவர் 173: இந்நிலையில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கவுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், ரஜினிகாந்த்தின் 173 வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173 வது படமாக உருவாகவுள்ளது. இந்த படத்தை 2027ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பானது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்பத்தி உள்ளது. மேலும் இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் ரிலீஸ் செய்யவுள்ளது.

கமல் நெகிழ்ச்சி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவது தொடர்பாக கமல்ஹாசன், " அன்புடை ரஜினி, காற்றாய் அலைந்த நம்மை இறுக்கி கிறுக்கி தனதாக்கியது சிகரத்தின் இரு பனிப்பாறைகள் உருகி வழிந்து இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் மழையாய் மாறுவோம். நம் அன்புடை நெஞ்சார நம்மைக்காத்த செம்புலம் நனைக்க, நாமும் பொழிவோம் மகிழ்வோம். வாழ்க நாம் பிறந்த கலை மண்" என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











