Thug Life Box Office: சூரியின் மாமன் வசூல் கூட போட்டி.. கமல்ஹாசனின் தக் லைஃப் 6 நாள் வசூல் இவ்வளவுதானா?
சென்னை: தமிழ் சினிமாவுக்கு 2025ம் ஆண்டு பொற்காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், சூர்யா, தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் என ஏகப்பட்ட நடிகர்களின் படங்கள் வெளியாவதை அறிந்து தியேட்டர் ஓனர்களும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால், 6 மாதங்கள் ஆகியும் எந்தவொரு படமும் 300 கோடி வசூல் கூட தொட முடியாமல் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர் ஓனர்களுக்கும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளன.
முதல் 6 மாதத்தில் அஜித் குமார், சூர்யா, கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகியும் பெரிதாக வசூல் வேட்டையை நடத்த முடியவில்லை. இதில், அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம் மட்டுமே ஓரளவுக்கு பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றது என்கின்றனர்.

கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியாகி 6 நாட்கள் ஆகியும் இன்னமும் சூரியின் மாமன் படத்தின் வசூலுடன் போட்டிப் போட்டுக் கொண்டிருப்பது தான் கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சூரியின் மாமன் வசூல்: நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்து வெளியான மாமன் திரைப்படம் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் மற்றும் விஜய் சேதுபதியின் ஏஸ் உள்ளிட்ட படங்களை முந்தியது என்று பார்த்தால், தற்போது தக் லைஃப் படத்துடன் வசூலில் போட்டிப் போட்டு வரும் அளவுக்கு மாஸ் காட்டியுள்ளது. 10 முதல் 15 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மாமன் திரைப்படம் 45 கோடி வரை வசூல் செய்துள்ளது.
தக் லைஃப் 6 நாள் வசூல்: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம் இதுவரை 6 நாட்களில் ஒட்டுமொத்தமாக இந்தியளவில் 40.95 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக sacknilk தகவல் வெளியிட்டுள்ளது. சூர்யாவின் ரெட்ரோ, அஜித் குமாரின் விடாமுயற்சி, பிரதீப் ரங்கநாதனின் டிராகன், சசி குமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களின் வசூலை கூட தக் லைஃப் திரைப்படம் தமிழ்நாட்டில் முறியடிக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர்.

1 கோடியாக குறைந்த வசூல்: மிகப்பெரிய புரமோஷன் உடன் வெளியான தக் லைஃப் திரைப்படம் செவ்வாய்க்கிழமையான நேற்று இந்தியளவில் வெறும் 1.75 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த வாரம் வெளியான அக்ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் நல்லாவே பிக்கப் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்திய பாக்ஸ் ஆபீஸிலேயே அந்த படம் 100 கோடியை தாண்டி விட்டது.
கைகொடுத்த 'வி' சென்டிமென்ட்: கமல்ஹாசன் நடிப்பில் கடந்த பல ஆண்டுகளாக வெளியான படங்களில் அவருக்கு 'வி' எழுத்தில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டு படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக கைகொடுத்து இருக்கின்றன. விஸ்வரூபம் மற்றும் விக்ரம் படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்கின்றனர். அடுத்ததாக அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் கமல் நடிக்கப் போகும் படம் ரசிகர்களை கவர்ந்தால் மட்டுமே வெற்றி பெறும் என்றும் இல்லையென்றால் சீக்கிரமே விக்ரம் 3 படத்தை கமல் ஆரம்பிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











