கர்நாடகாவுக்குத்தான் கமலுடைய ஆதரவாம்.. அவரே ஓபனாக சொல்லிட்டாரே.. செம மேட்டர்
சென்னை: தக் லைஃப் படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. மோசமான விமர்சனத்தையும் ட்ரோலையும் சந்தித்த அந்தப் படம்; கன்னட மொழி குறித்து கமல்ஹாசன் பேசியது சர்ச்சையானதால் அந்த மாநிலத்தில் மட்டும் வெளியாகவில்லை. வெளியான மற்ற மாநிலங்களிலும் பெரிய வசூல் எதையும் செய்யவில்லை. இப்படிப்பட்ட நிலைமையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கமல்ஹாசன் கொடுத்திருக்கும் பேட்டி ட்ரெண்டாகியிருக்கிறது.
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் தமிழ் மொழியிலிருந்துதான் கன்னட மொழி பிறந்ததாக சிவராஜ்குமாரை பார்த்து பேசினார். அந்தப் பேச்சு சில நாட்களுக்கு பிறகு கர்நாடகாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அம்மாநிலத்தின் முதலமைச்சர் தொடங்கி நீதிமன்ற நீதிபதிவரை இதற்காக கமல்ஹாசனுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்தார்கள். மேலும் அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையென்றால் கன்னடத்தில் படம் ரிலீஸாகாது என்றும் சொன்னார்கள்.
கெத்து காட்டிய கமல்: ஆனால் கமல்ஹாசனோ மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற தெளிவுப்படுத்திவிட்டார். மேலும் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகாமல் போனால் ஒன்னும் பிரச்னை இல்லை என்றும் கூறிவிட்டார். அதுமட்டுமின்றி நீதிமன்றத்தில் கொடுத்த விளக்கத்தில்,' தவறாக பேசியிருந்தால் மன்னிப்பு கேட்கலாம். பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டால் எப்படி மன்னிப்பு கேட்பது' என்றும் தெரிவித்திருந்தார்.

கமலுக்கு பாராட்டு: கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசனின் ஸ்டாண்டை பார்த்து பலரும் பாராட்டினார்கள். தான் தயாரித்த படம் ஒரு மாநிலத்தில் வெளியாகாமல் இருந்தால் எவ்வளவு கோடி ரூபாய் நஷ்டத்தை சந்திக்கும் என்பதை தெரிந்திருந்தும்; தைரியமாக இப்படி ஒரு முடிவில் உறுதியாக இருந்ததை நினைத்து பெருமையாக இருப்பதாகவும் பலரும் சொன்னார்கள். தக் லைஃப் அந்த மாநிலத்தில் வெளியாகாததால் கிட்டத்தட்ட பத்து கோடி ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசனின் பேட்டி: இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கமல் பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "நான் ஏக் துஜே கே லியே படத்தில் நடித்திருக்கிறேன். தமிழ் இளைஞருக்கும், ஹிந்தி இளம்பெண்ணுக்கும் இடையேயான காதலை மையப்படுத்தியதுதான் அந்தப் படம். ஒரு மொழியை திணிப்பு இல்லாமல் நாங்கள் கற்றுக்கொள்வோம். நீங்கள் திணிக்க வேண்டாமே. இந்த விவகாரத்தில் நான் பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு நான் ஆதரவாக நிற்கிறேன்.
ஆங்கிலமே போதும்: நீங்கள் உண்மையில் சர்வதேச அளவிலான முன்னேற்றத்தை எதிர்பார்த்தால்; ஒரு மொழியை கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதற்கு ஆங்கிலமே போதுமானதாக இருக்கிறது. ஸ்பானிஷ், சீன மொழியைக்கூட கற்றுக்கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் 350 ஆண்டு கால ஆங்கில கல்வியைத்தான் நாம் உறுதியாக கற்று வைத்திருக்கிறோம். எனவே நீங்கள் அதிலிருந்து விலகி புதிதாக ஒன்றில் செல்லும்போது அனைத்தையும் முதலிலிருந்து தொடங்க வேண்டும்.
வேலை கிடைக்காது: இது தமிழ்நாட்டில் பலரை எழுத்தறிவு இல்லாதவர்களாக மாற்றிவிடும். திடீரென்று ஹிந்தியை கட்டாயப்படுத்திவிட்டு; அந்த மொழியை கற்காவிட்டால் விந்திய மலைக்கு அப்பால் உங்களுக்கு வேலை கிடைக்காது என்று சொன்னால் என்ன நியாயம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாகின. அங்கு என் மொழியின் நிலைமை என்ன. நான் பேசும் மொழியும் இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழிதானே" என்றார். அவரது இந்தப் பேட்டி ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











