Kamal Hassan: "எத்தனையெத்தனை இதயங்கள்... அத்தனையும் நான் உறையும் இல்லங்கள்.." கமல் உருக்கம்!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனை முன்னிட்டு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

அதேபோல், கமல்ஹாசனும் தனது திரையுலக நண்பர்களுக்கு விருந்துகொடுத்து அசத்தினார்.
இந்நிலையில், பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்தவர்களுக்கு தனது டிவிட்டரில் உருக்கமாக நன்றிக் கூறியுள்ளார் கமல்.
நன்றி நவில நாள் போதாது
இந்திய சினிமாவின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கமல்ஹாசன். பல புதிய முயற்சிகளுக்கு வித்திட்ட கமல்ஹாசன், 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், குரூப் டான்ஸர், உதவி நடன இயக்குநர், வசனகர்த்தா, கதை - திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என கால் வைத்த இடமெல்லாம் உச்சம் பல தொட்டு சாதனை படைத்துள்ளார்.
சூப்பர் ஸ்டார், தல, தளபதி என பல பட்டங்களுக்கு கடும் போட்டி காணப்பட்டாலும், உலகநாயகன் என்பது கமலுக்கு மட்டுமே நிரந்தரமாகிவிட்டது. கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தின் மெகா வெற்றிக்குப் பின்னர், அடுத்தடுத்து நடிப்பில் பிஸியாகிவிட்டார். இந்தியன் 2, கல்கி, இப்போது தக் லைஃப் என இன்னும் இரண்டு வருடங்களுக்கு கமலின் கால்ஷீட் புக் ஆகிவிட்டது.
இன்னொருபக்கம் அரசியல், பிக் பாஸ் என எல்லா பக்கங்களும் ரவுண்டு கட்டி வலம் வருகிறார். இந்நிலையில் நேற்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிய கமல்ஹாசன், தனது திரையுலக நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து அசத்தினார். இந்நிகழ்ச்சியில் அமீர்கான், சிவராஜ்குமார், சூர்யா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு கமல்ஹாசனை வாழ்த்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இதனையடுத்து பிறந்தநாளுக்கு வாழ்த்தியவர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், "எத்தனையெத்தனை இதயங்கள்... அத்தனையும் நான் உறையும் இல்லங்கள். என் பிறந்த நாளில் என்னை வாழ்த்திய கலைஞர்கள், தலைவர்கள், நண்பர்கள், மய்ய உறவுகள், என்னுடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிய ரசிகப்பெருமக்கள் அனைவருக்கும் நன்றி நவில நாள் போதாது. என்றென்றும் என் நினைவில் இருப்பீர்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த உருக்கமான டிவிட்டர் பதிவு, ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இந்நிலையில் இன்று அல்லது நாளை முதல் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கும் இந்தப் படம் இந்தியன் 2, இந்தியன் 3 என இரு பாகங்களாக ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











