Kamal: 1980களில் பாலிவுட்டை கலக்கிய கமல்... மிரண்டுபோன இந்தி ஹீரோக்கள்... சதியால் வீழ்ந்த உலகநாயகன்
சென்னை: கோலிவுட்டின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல் இப்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்தியன் 2, ப்ராஜெக்ட் கே - கல்கி என அடுத்தடுத்து இரண்டு படங்கள் கமல் நடிப்பில் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், 1980களில் இந்தி திரையுலகை கலக்கி வந்த கமல், அதன் பின்னர் பாலிவுட்டில் அதிகம் நடிக்கவில்லை.
அதற்கான காரணம் குறித்து தற்போது சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.

பாலிவுட்டில் சதியால் வீழ்ந்த கமல்: களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் உலக நாயகன் கமல். சிறுவயது முதலே நடிப்பில் கலக்கிய கமல்ஹாசன், இயக்குநர்கள் கே பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோரின் படங்களில் நடித்து பிரமிக்க வைத்தார். 1970, 80களிலேயே தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்திருந்தார்.
முக்கியமாக கமல்ஹாசனுக்கு இந்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. பாலிவுட் ஹீரோக்களுக்கே சவால் விடும் வகையில், ஸ்டைலிஷான நடிகராக மாஸ் காட்டினார். இதனால், ஏக் துஜே கே லியே, சனம் தெரி கசம், யே தோ கமல் ஹோ கயா, ஜரா சி ஜிந்தகி, சாகர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1980 முதல் 1985 வரை 13 இந்திப் படங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதன்பின்னர் கமல் இந்திப் படங்களில் நடிப்பதை விட்டுவிட்டார். அதேபோல், மற்ற மொழி படங்களையும் குறைத்துக்கொண்டு தமிழில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தினார். இந்தி ரசிகர்களிடம் கமல்ஹாசன் நடிப்புக்கு அதிகம் வரவேற்பு இருந்தும் அவர் நடிக்காமல் போனது அப்போதே பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. அதன் பின்னணி குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது கமல் நடித்த ஏக் துஜே கே லியே திரைப்படம் இந்தியில் சக்கைப் போடு போட்டது. கமலின் நடிப்புக்காகவே இந்தப் படத்தை பாலிவுட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அப்போது ஒரு பிரபல பாலிவுட் ஹீரோவின் ரசிகர் மன்றம், அப்படியே கமல் ரசிகர் மன்றமாக மாறிவிட்டதாம். இந்தச் சம்பவம் இந்தி திரையுலகின் முன்னணி ஹீரோக்களை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதேபோல், பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படமும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் பட்டையைக் கிளப்பியுள்ளது. கமல்ஹாசன், இயக்குநர்கள் பாரதிராஜா, கே பாலச்சந்தர் போன்ற ஜாம்பவான்கள் தமிழில் இருந்து இந்தி திரையுலகை நோக்கி நகர்ந்ததால், பாலிவுட்டில் பெரும் புயலே அடித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் கமல் நடித்த Sanam Teri Kasam திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.
இதற்கு மேலும் கமலை இந்தியில் நடிக்கவிட்டால் நம்ம பொழப்பு மோசமாகிவிடும் என முடிவெடுத்து சில பாலிவுட் டாப் ஹீரோக்கள், அவரை அப்படியே ஓரங்கட்டியுள்ளனர். மேலும், கமலின் படங்களுக்கு நெகட்டிவ் ப்ரொமோஷன் கொடுத்து ஹிட்டாகாமல் பார்த்துக்கொண்டனர். ஒருகட்டத்தில் இது கமலுக்கே தெரியவந்ததால் அதன்பிறகு இந்தியில் நடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டாராம்.


Click it and Unblock the Notifications











