பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இளையராஜாவுடன் இணையும் கமல்!
கமல் ஹாஸன் தனது ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை 1981-ல் தொடங்கியதிலிருந்து கடந்த 2005-ம் ஆண்டு வரை அவரது சொந்தப் படங்களின் இசையமைப்பாளராக இளையராஜா மட்டும்தான் பணியாற்றினார்.
இடையில் காதலா காதலா படத்துக்கு மட்டும் இளையராஜா மகன் கார்த்திக் ராஜா இசையமைத்தார்.
2005-ம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்குப் பிறகு கமலின் படங்களுக்கு இசையமைத்தவர்கள் லிஸ்ட்டில் பலர் வந்து போனார்கள். ஆனால் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை.

11 ஆண்டுகளுக்குப் பிறகு
இப்போது 11 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இளையராஜாவுடன் கைகோர்க்கிறார் கமல் ஹாஸன். அதுவும் ஒரு படமல்ல... அடுத்தடுத்து இரு படங்களில் இணையவிருக்கிறார்கள்.

அப்பா அம்மா விளையாட்டு
டி.கே. ராஜீவ் குமார் இயக்கும் இந்தப் படத்தில் கமலும் ஷ்ருதி ஹாசனும் நடிக்க உள்ளார்கள். படத்துக்கு தலைப்பு அப்பா அம்மா விளையாட்டு என தலைப்பிட்டுள்ளனர்.

தமிழ் - தெலுங்கு
1989-ல் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் சாணக்கியன் என்கிற படத்தில் நடித்தார் கமல். இப்போது 26 வருடங்கள் கழித்து மீண்டும் ராஜீவ் குமாருடன் இணைய உள்ளார் கமல். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் படத்தில் கமலுக்கு ஜோடியாக அமலா நடிக்க உள்ளார்.

மேலும் ஒரு படம்
இதனிடையே கமல் - ராஜீவ் குமாரின் கூட்டணி இன்னொரு படத்திலும் இணைகிறது. இந்தப் படத்தில் கமல் மகளாக ஷ்ருதி ஹாசன் நடிக்க உள்ளார். கமலின் எழுத்தில் ராஜீவ் குமாரின் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கும் இளையராஜா இசையமைக்கிறார்.
இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











