Kamal: களத்தூர் கண்ணம்மா பிரபலம் மறைவு... நன்றி மறக்காத கமல்... டிவிட்டரில் இரங்கல்
சென்னை: இந்திய சினிமாவில் உச்ச நடிகரான கமல்ஹாசன் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
5 வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், இன்று சினிமாவில் தொடாத உச்சமே இல்லை எனலாம்.
இந்நிலையில் களத்தூர் கண்ணம்மா படத்தின் தயாரிப்பு நிர்வாகியான அருண் வீரப்பன் காலமானார்.
அவரது மறைவை அறிந்த கமல், பழைய நினைவுகளை மறக்காமல் மிக உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.

களத்தூர் கண்ணம்மா பிரபலம் மறைவுக்கு கமல் இரங்கல்: கோலிவுட் மட்டுமின்றி இந்திய சினிமாவின் அடையாளமாக வலம் வருபவர் கமல்ஹாசன். ரசிகர்களால் உலக நாயகன் என கொண்டாடப்படும் கமல், இப்போதும் இளம் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் நடித்து வருகிறார். கடந்தாண்டு கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.
மேலும், பிரபாஸின் ப்ராஜெக்ட் கே எனப்படும் கல்கி படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார். இந்தியன் 2, கல்கி இரண்டு படங்களும் வெளியானதும், ஹெச் வினோத், மணிரத்னம் ஆகியோர் இயக்கத்திலும் கமல் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடைய திரையுலகில் தனது 64வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் கமல். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், இன்று உலகநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவிஎம் தயாரிப்பில் பீம்சிங் இயக்கிய களத்தூர் கண்ணம்மா படம் தான், கமலுக்கு சினிமாவில் மிகப் பெரிய அறிமுகம் கொடுத்தது. அதோடு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான ஜனாதிபதியின் தங்கப்பதக்க விருதையும் பெற்றுக்கொடுத்தது. கமலின் திரையுலக பயணத்தில் இப்படி பல புதிய பாதையை அமைத்துக்கொடுத்தது களத்தூர் கண்ணம்மா. இந்நிலையில், இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகியான அருண் வீரப்பன் என்பவர் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

இவர் எவி மெய்யப்பனின் உறவினர் என்பதோடு, கியூப் நிறுவன உரிமையாளர் செந்தில் என்பவரின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தயாரிப்பு நிர்வாகி அருண் வீரப்பனின் மறைவை அறிந்த கமல்ஹாசன், டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "ஏவி மெய்யப்பன் அவர்களின் மாப்பிள்ளையும், கியூப் நிறுவன அதிபர் செந்திலின் தந்தையுமான அருண் வீரப்பன் மறைந்து விட்டார் என்பதறிந்து துயருற்றேன். நான் அறிமுகமான களத்தூர் கண்ணம்மாவின் தயாரிப்பு நிர்வாகி அவர். சினிமா தயாரிப்பில் ஆழங்கால்பட்ட அனுபவம் மிக்கவர். சினிமாவின் தீராக் காதலராக பல்லாண்டு காலம் திரைத்துறைக்குத் தன் பங்களிப்பினை அளித்தவர். அவருக்கு என் அஞ்சலி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கமலின் இந்த டிவிட்டர் பதிவில் அவரது ரசிகர்களும் அருண் வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்னும் பழயதை மறக்காத கமல், நன்றியுணர்வுடன் இரங்கல் தெரிவித்துள்ளதையும் அவர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











