கமலுக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லையாம்!
50 ஆண்டுகள் சினிமாவையே சுவாசித்து வாழ்பவர், பல பிரமாண்ட வெற்றிப் படங்கள் கொடுத்தவர் என்று அறியப்படும் கலைஞானி கமல்ஹாஸனுக்கு சொந்தமாக ஒரு வீடுகூட இல்லை என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கிறது.
ஆனால் உண்மை அதுதான். கமல் இப்போது வசிப்பது வாடகை வீட்டில்தான். சொந்தமாக இருந்த வீட்டை சமீபத்தில் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஆழ்வார்பேட்டை வீடு
கமலுக்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் சகல வசதிகளுடனும் ஒரு வீடு இருந்தது. வீட்டுக்குள் மினி தியேட்டரே உண்டு. அந்த வீட்டை தனது சினிமா கடன்களை அடைப்பதற்காக விற்றுவிட்டாராம் கமல். அதற்குப் பிறகுதான் அவர் நீலாங்கரைக்கு இடம் மாறினார்.

என்னென்ன இருக்கு..?
இப்போதைக்கு அவரிடம் இருப்பது ஆழ்வார்பேட்டையில் சில கிரவுண்ட் இடம், ஒரு அலுவலகம் மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஒரு ஏக்கர் நிலம். வாலாஜாபாத் அருகே பல ஏக்கர் நிலத்தை மருதநாயகம் ஆரம்பித்த சமயத்தில் அவர் வாங்கிப் போட்டதாகச் சொன்னார்கள். ஆனால் அது என்ன ஆனதென்று விவரம் தெரியவில்லை.

விஸ்வரூபத்துக்காக...
இப்போது ஏன் கமலின் சொத்துபற்றி இவ்வளவு செய்திகள் என்கிறீர்களா? வேறு ஒன்றுமில்லை... விஸ்வரூபத்தை வெளியிடுவதற்கு முன் அவர் ரூ 50 கோடியை பிரசாத் வி பொட்லூரி நிறுவனத்துக்கு செட்டில் செய்ய வேண்டியுள்ளதாம். இந்தப் பணத்தைத் திரட்ட தன்னை நம்பும் சில நண்பர்களிடம் கேட்டு வருகிறாராம் கமல்.

தயங்கும் வங்கிகள்
வங்கிகளிடம் கடன் கேட்க முடியாத நிலை கமலுக்கு. ஏற்கெனவே உன்னைப் போல் ஒருவன் படத்துக்கே நஷ்டக் கணக்கு காட்டியுள்ளார். எனவே அடுத்து சொத்துக்களை பிணையமாகக் காட்டித்தான் கடன் கேட்க வேண்டும். அதற்கு தாமதமாகும் என்பதால் யோசிக்கிறாராம்.
இந்தப் பணத்தை செட்டில் செய்யாவிட்டால், பிவிபி நிறுவனம் லேபுக்கு கடிதம் கொடுத்துவிடும் அபாயமுள்ளது. விஸ்வரூபமும் முடங்கிவிடும். எனவே பண ஏற்பாட்டில் தீவிரமாக உள்ளார் கமல்.

முதல்முறையல்ல...
'கமல் இப்படியொரு நெருக்கடி நிலையில் தவிப்பது இது முதல்முறை அல்ல. முந்தைய ஆண்டுகளில் பல சங்கடங்களை சமாளித்து வெற்றிகளைக் கொடுத்தவர். எனவே இப்போதுள்ள நெருக்கடிக்காக அவரைப் பார்த்து யாரும் பரிதாபப்பட வேண்டியதில்லை. மனிதர், அதையும் வென்று காட்டுவார்!', என்கிறார்கள் கமலுக்கு நெருக்கமான வட்டத்தில்!


Click it and Unblock the Notifications











