ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை .. மனு பாக்கரை பாராட்டிய கமல்!
சென்னை: பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஹரியானா வீராங்கனை மனு பாக்கர் சாதனை படைத்துள்ளார். இந்த வரலாற்று சாதனையை படைத்த மனு பாக்கரை உலக நாயகன் கமலஹாசன் , தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டி உள்ளார்.
33வது ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக இளம் வீராங்கனை மனு பாக்கர் 10 மீ ஏர் பிஸ்டர் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இந்த நிலையில் மீண்டும் 10 மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் கூட்டணி களமிறங்கியது. நேற்றைய தகுதிச்சுற்றில் 3வது இடத்தில் நிறைவு செய்த இந்த கூட்டணி, வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

பாரீஸ் ஒலிம்பிக்: வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் தென் கொரியாவின் ஓ ஏ ஜின் - லீ வோன்ஹு கூட்டணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே இந்தியாவின் மனு பாக்கர் - சரப்ஜோத் சிங் கூட்டணி முன்னிலையிலேயே இருந்தது. 2-2 என்று புள்ளிகள் இருந்த நிலையில், அடுத்தடுத்து 8-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
2வது பதக்கம்: தொடர்ச்சியாக 4 ரவுண்ட்களை இந்தியா வென்ற நிலையில், பதக்கத்தை உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இருப்பினும் திடீரென கொரியா இணை எழுச்சியால் ஆட்டம் 10-6 என்ற நிலைக்கு வந்தது. ஆனால் 9வது ஷாட்டில் இந்திய அணி 20.5 புள்ளிகள் பெற்று 12-6 என்று முன்னிலை பெற்று இறுதிப் போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி 16-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது.
இரண்டாவது பதக்கம்: ஏற்கனவே மனு பாக்கர் 10 ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் வெண்கலம் வென்றுள்ள நிலையில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை மனு பாக்கர் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி மகளிருக்கான தனிநபர் 25மீ பிஸ்டல் பிரிவில் விளையாடுகிறார். அவருடன் மற்றொரு வீராங்கனையான ஈஷா சிங்கும் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் வாழ்த்து: ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் பெற்ற மனு பாக்கரை மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெகுவாக பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உங்களின் செயல்திறன் மிகவும் சிறப்பானது மற்றும் அனைத்து இந்தியர்களையும் பெருமைப்படுத்துகிறது. நீங்கள் PT உஷா, கர்ணம் மல்லேஸ்வரி மற்றும் மேரி கோம் போன்ற ஜாம்பவான்களின் வரிசையில் இணைகிறீர்கள். இந்த சாதனை அடுத்த தலைமுறை குழந்தைகளை உங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்ற ஊக்குவிக்கும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











