விஸ்வரூபம் 2-ஐத் தொடர்ந்து கமல் இயக்கத்தில் 'மூ'!
சென்னை: விஸ்வரூபம் 2 படத்தைத் தொடர்ந்து கமல் இயக்கும் படத்துக்குத் தலைப்பு மூ என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமல் நடித்து இயக்கி ஆஸ்கர் பிலிம்சோடு இணைந்து தயாரித்து வரும் படம் விஸ்வரூபம் 2. பூஜா குமார், ஆன்ட்ரியா உள்பட பலர் நடிக்கும் இந்தப் படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. விஸ்வரூபம் முதல் பாகத்தைவிட இந்த இரண்டாம் பாகம் மிகப் பரபரப்பாக இருக்கும் என கமல் தெரிவித்துள்ளார்.
இந்தப் படம் தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கிறார்கள்.

அடுத்து என்ன?
விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் லிங்குசாமி தயாரிக்கும் படத்தில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை லிங்குசாமியும் உறுதிப்படுத்தினார். படத்தின் தலைப்பு உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

ரமேஷ் அரவிந்த்
இந்தப் புதிய படத்தை முதலில் ரமேஷ் அரவிந்த் இயக்குவார் என்று கூறியிருந்தனர். இதுகுறித்து ரமேஷ் அரவிந்திடமும் பேசப்பட்ட நிலையில், கமலையே இயக்குநர் பொறுப்பையும் கவனிக்குமாறு லிங்குசாமி கேட்டுக் கொண்டாராம்.

கமல் சம்மதம்
இதற்கு கமலும் சம்மதம் தெரிவித்துள்ளார். படத்தை இயக்கி நடிப்பதில் உள்ள சவுகரியத்துக்காக இந்த கோரிக்கையை அவர் ஒப்புக் கொண்டாராம். இதுதான் சரியான முடிவு என ரமேஷ் அரவிந்தும் மகிழ்ச்சியுடன் வரவேற்றாராம்.

மூ
படத்துக்கு முதலில் தலைப்பு அறிவிக்கப்படவில்லை. இப்போது 'மூ' என்பதுதான் தலைப்பு என கூறியுள்ளனர். ஆனால் இதனை இன்னும் தயாரிப்பாளர் தரப்பில் உறுதிப்படுத்தவில்லை. ஆரம்பத்தில் உத்தமவில்லன் என்று கூறி வந்தனர்.

மூன்று வேடங்கள்?
இந்தப் படத்தில் கமல் மூன்று வேடங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் படம் தயாராகிறது. தமிழ் தவிர, மற்ற மொழிகளில் அங்கு பிரபலமாக உள்ள நடிகர்கள் நடிப்பார்கள் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











