'அபூர்வ சகோதரர்கள்' அப்பு கதாபாத்திரத்தில் நடித்தது சவாலாக இருந்தது..அனுபவத்தை பகிர்ந்த கமல்!
சென்னை: கமல்ஹாசன் மற்றும் ஷங்கரின் பிரமாண்டமான இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் இந்தியன் 2. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பான் இந்திய படமாக ஜூலை12ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் அபூர்வ சகோதரர்கள் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்தியன் 2 படத்தில் சித்தார்த், மறைந்த விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இணையத்தில் ஹிட்டடித்து வருகிறது.

இந்தியன் 2: படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், இந்தப் படத்திற்காக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். இந்தியன் முதல் பாகத்தை ஒப்பிடும்போது, இந்தியன் 2 பணத்தின் அடிப்படையில் மட்டுமல்ல மற்ற விஷயங்களிலும் மிகப் பெரிய படமாக அமையும். அந்த நேரத்தில் இந்தியன் எடுக்கப்பட்டபோது தமிழ் சினிமாவில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் அது. படத்தோட பட்ஜெட் ரொம்பவே பெரிய பட்ஜெட் என்பதால் அந்த சமயம் நாங்கள் மிகவும் பயந்தோம். ஆனால், இந்தியன் முதல் பாகம் ஒரு சாதாரண குடும்பம். இரண்டாவது பாகம் ரொம்பவே வசதியான குடும்பம். அந்த அளவுக்கு பெரிய, பிரமாண்டமான படம் இந்தியன் 2. படத்தினை ஷங்கர் அருமையாக இயக்கியுள்ளார். அவர் ஒரு விஷயத்தில் கூட சமரசம் செய்ய மாட்டார். நம் இயக்குனர்கள் நம்ப முடியாததை நம்ப வைக்கிறார்கள்.
அபூர்வ சகோதரர்கள்: தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அபூர்வ சகோதரர்கள் படத்தின் படப்பிடிப்பின்போது ஒரு பெட்டிக்குள் என்னை பாதியளவு புதைத்துவிட்டனர். பெட்டியில் இருந்த மண்ணில் ஏகப்பட்ட சிவப்பு எறும்புகள். நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் இப்படி எறும்புகள் கடிப்பது தெரிந்தது. எறும்புகள் கடித்துக்கொண்டே இருந்ததால் நான் மற்றவர்கள் மீது எரிந்து, எரிந்து விழுகிறேன். சீக்கிரம் எடுத்து தொலைங்க என்று கூறிவிட்டேன். அதை இப்போது நினைத்தால் கூட கால் அரிக்கிறது.
திறமையான இயக்குநர்: அப்பு கதாபாத்திரத்திற்கு இடுப்பிற்கு கீழ் பகுதி இயற்கையாக இருப்பது போன்று இருந்தால், நன்றாக இருக்காது என்பதால், முதுகின் நடுப்பகுதியில் இருந்து செட் செய்திருந்தோம். அப்போதுதான் அந்த கதாபாத்திரம் நடப்பதற்கு சரியாக இருந்தது. அதே போல படத்தின் இயக்குநர், சிங்கீதம் சீனிவாச ராவின் திறமையும் அவர் படத்தை கையாண்ட விதமும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது என்று அபூர்வ சகோதரர்கள் படத்தை பாராட்டினார்.
அபூர்வ சகோதரர்கள்: 1989ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படம் இன்றளவும் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசித்து பார்க்கும் படமாகவே உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் காவல்துறை அதிகாரியான தந்தை கதாபாத்திரத்திலும், அப்பு என்ற சர்க்கஸ்காரராக குள்ளமான கமல்ஹாசனாகவும், ராஜா என்ற மெக்கானிக் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். மூன்று வேடங்களுக்கும் கமல்ஹாசன் வித்தியாசமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருப்பார். இதில், ஜெய்சங்கர், நாகேஷ், கௌதமி, ஜனகராஜ், ரூபிணி, மனோரமா, ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











